சென்னை: நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 பணியிட நியமனங்களில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுந்துள்ள புகார் குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: எங்கும் ஊழல் – எதிலும் ஊழல். திமுக ஆட்சியின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளில் காலி பதவிகளுக்கு புதிய ஊழியர்களை நியமிக்க நடைபெற்ற தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், இதில் சுமார் ரூ.800 கோடிக்கு மேல் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக அமலாக்கத் துறை தமிழக காவல்துறை டிஜிபிக்கு அறிக்கை அளித்து, அதன் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய கோரியுள்ளது. தமிழக காவல்துறை யாரையும் காப்பாற்ற முயற்சிக்காமல் நடுநிலையோடு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நகேந்திரன்: தங்கள் சொந்த பாக்கெட்டுகளை நிரப்ப பணம் பெற்றுக் கொண்டு, தகுதியற்ற நபர்களைப் பணியமர்த்தி, பல்லாயிரக்கணக்கான திறமையான இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறித்துள்ளது தமிழக அரசு. தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கி வரும் திமுக அரசின் ஊழல் மோகத்தை அடக்க சிபிஐ விசாரணை வேண்டும்.
பாமக தலைவர் அன்புமணி: ஒவ்வொரு பணிக்கும் ரூ.35 லட்சம் வரை லஞ்சம் பெறப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. வேலைவாய்ப்பு வழங்குவதிலும் கரப்ஷன், கலெக்சன், கமிஷன் கலாச்சாரத்தை திமுக அரசு கட்ட
விழ்த்து விட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழக காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிந்து, வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்: இந்த விவகாரம் குறித்து தமிழகக் காவல்துறை உரிய விசாரணை மேற்கொண்டு உண்மையை வெளிக்கொண்டு வருவதோடு, தவறு நடைபெற்றருக்கும்பட்சத்தில் தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை: நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரருக்கு சொந்தமான நிறுவனத்தின் வங்கி மோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் விசாரணையின்போது இந்த முறைகேடு விவரம் தெரியவந்துள்ளது. திமுக அரசின்கீழ், நடந்த பெரிய மோசடிகள் மற்றும் முறையான ஊழல்கள் மீண்டும் மீண்டும் அம்பலமாகி வருகிறது. நீதித்துறை மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி: இந்த முறைகேடு குறித்து தமிழக காவல்துறை விசாரித்தால் உண்மை வெளிவராது. எனவே, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
