கும்பகோணம்: கும்பகோணம் வட்டம் சுவாமிமலையில் உள்ள சுவாமிநாத சுவாமி கோயிலுக்கு வெளி மாநில, மாவட்ட பக்தர்கள் ஏராளமானோர் வருகை தருகின்றனர். இந்நிலையில், அங்குள்ள தங்கும் விடுதிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்ததால், அனைத்து தரப்பினரும் கோயிலுக்கு வந்து தங்கி தரிசனம் செய்யும் வகையில், சென்னையைச் சேர்ந்தவரும், சுவாமிமலை சுவாமியை குலதெய்வமாக வழிபடுபவருமான ஒருவர் அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன விடுதி கட்ட முடிவெடுத்தார்.
அதன்படி, சுவாமிமலையில் உள்ள சுவாமிநாத சுவாமி நகரில் 8,000 சதுரடியில் இடத்தை தனது பெயரில் வாங்கி, அதில் 4 கட்டிடங்களில் மொத்தம் 16 அறைகளுடன் தங்கும் விடுதியை கட்டினார். இதையடுத்து, 2022-ம் ஆண்டு ஏப்.5-ம் தேதி சுவாமிமலை கோயிலுக்கு தானமாக அந்த விடுதியை வழங்கினார். இந்நிலையில், அந்த விடுதியில், கோயில் நிர்வாகம் முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால், அண்மைக்காலமாக அந்த விடுதி கட்டிடங்கள் செடி, கொடிகள் மண்டி சேதமடைந்து வருகின்றன.

விடுதி கட்டிடம்.
விஷ்வ இந்து பரிஷத் முன்னாள் மாநகரத் தலைவர் ராஜ.கண்ணன் கூறியதாவது: சுவாமிமலை கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கி இருந்து தரிசனம் மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான இடத்தில், அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய 16 அறைகள் கொண்ட கட்டிடத்தை அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள சுவாமிமலை கோயிலுக்கு, சென்னையைச் சேர்ந்த ஒருவர் தானமாக வழங்கினார். ஆனால், தானமாக வழங்கி 4 ஆண்டுகளான நிலையில், விடுதி கட்டிடம் கேட்பாரற்று உள்ளது. மேலும், விடுதி கட்டிடங்கள் செடி, கொடிகள் மண்டி, மரங்கள் முளைத்து சேதமடைந்து வருகின்றன.
இதேபோல, அறைகளில் உள்ள ஏசி, மின்விளக்குகள், இருக்கைகள் உள்ளிட்ட பொருட்கள் உள்ளனவா என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவே, அறநிலையத் துறை அலட்சியமாக செயல்படாமல், பக்தர்களுக்காக தானமாக வழங்கிய விடுதியை சீரமைத்து குறைந்த வாடகையில் பக்தர்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும். விடுதியை கோயில் பணியாளர்களுக்கு வாடகைக்கு விடுவதை தவிர்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அறநிலையத் துறை அதிகாரிகள் கூறுகையில், “விடுதியை சீரமைத்து கோயில் பணியாளர்களுக்கு வாடகைக்கு விட உள்ளோம். மின் இணைப்பு வழங்குவது தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்த மாதம் முதல் பணியாளர்கள் பயன்பாட்டுக்கு விடப்படும்” என தெரிவித்தனர்.