23
——————————
பால்நிலை வன்முறைகளுக்கு எதிராகப் பன்னாட்டளவில் நடத்தப்பட்டு வரும் ‘நூறு கோடி மக்களின் எழுச்சி’ என்னும் விழிப்புணர்வுச் செயல்பாட்டின் ஓரம்சமாக வன்முறையற்ற வாழ்வுக்கான காண்பியக் கலைஞர்களின் ஏற்பாட்டில் ‘வன்முறைகளற்ற வாழ்வைக் கொண்டாடுவோம்!’ என்ற தலைப்பிலான காண்பியக் கலைக் காட்சி கடந்த 2026 பெப்ரவரி 14 – 16 ஆந் தேதிகள் வரை மட்டுநகர் புதிய வீதியிலுள்ள ‘கூடம்’ என்னும் இடத்தில் மிகவும் ஆக்கபூர்வமாக நடந்தேறியது.
பத்திற்கும் மேற்பட்ட ஓவியக் கலைஞர்களின் காண்பியப் படைப்புகள் இதில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இதில் ஓவியர் சு.நிர்மலவாசனின் படைப்பாக்கமாக ‘ஹரிணி அமரசூரிய’ என்னுந் தலைப்பில் வரையப்பட்ட ஓவியம் அமைந்திருந்தது.
இந்த ஓவியம் ஹரிணி என்னும் பெண்ணிலைவாதிக்கு எதிராக அண்மைக் காலங்களில் புனையப்பட்ட எதிர்மறையான பிரச்சாரங்களுக்கான ஓர் எதிர்வினையாகவே ஆக்கப்பட்டிருந்தது.
அதாவது இலங்கையின் ஏழு தசாப்தகால அரசியல் வரலாற்றில் முதன் முதலாக பெண்ணிலைவாத ஆளுமை ஒருவர் அரசாங்கத்தின் இரண்டாவது அதிகாரக் கதிரையில் மக்களின் பெரும்பான்மை அங்கீகாரத்துடன் அமர்ந்துள்ள நிலையில், அவரின் முன்மொழிவுகளுடன் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட முற்போக்கான திட்டங்கள் தொடர்பாக, அவர் ஒரு பெண் என்ற காரணத்தினால் இனம், மொழி, சமயம், சாதி, வர்க்கங் கடந்து ஒன்றுபட்ட சில ஆணாதிக்கப் பிற்போக்குச் சிந்தனையாளர்களால் மிகவும் மோசமான எதிர்மறை விமரிசனங்களை எதிர்கொண்டார்.
இத்தகைய பழமைவாதப் பிற்போக்குத்தனமான வெளிப்படுத்தல்களுக்கு மாற்றாக நாட்டின் பல்வேறு தரப்புகளிடமிருந்தும் ஆக்கபூர்வமான எதிர்வினைகள் உடனுக்குடன் வெளிக்காட்டப்பட்டிருந்தன.
இவற்றுள் ஆக்கபூர்வமான கலையாக்க எதிர்வினையாகவே சு.நிர்மலவாசனின் ‘ஹரிணி அமரசூரிய’ எனும் படைப்பாக்கம் அமைந்திருந்தது.
சு.நிர்மலவாசன் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர் ‘வெள்ளையடித்தல்’ என்ற எண்ணக்கருவுடன் பல்வேறு ஓவிய, தாபனக் கலையாக்கங்களை உருவாக்கியிருந்தார்.
அதாவது ஆதிக்கச் சிந்தனைகளும் அவற்றின் செயற்பாடுகளும் எவ்வாறு தமது ஆதிக்கப் பண்பாட்டிற்கேற்ற விதத்தில் பல்வகைமைகளை வெள்ளையடிப்புச் செய்து ஒற்றைப் பண்பாட்டைக் கட்டமைத்து வருகின்றன என்பதை அத்தகைய காண்பியங்கள் வழியாகப் பொதுவெளியில் பகிர்ந்திருந்தார்.
இந்த வெள்ளையடித்தல் எனும் காண்பியங்களின் தொடர்ச்சியாகவே இந்த ‘ஹரிணி அமரசூரிய’ எனும் ஓவியத்தையும் படைத்துள்ளார்.
இனம்,மதம்,மொழி,சாதி,வர்க்கம் என்று வேறுபட்டு இயங்கும் ஆணாதிக்கப் பிற்போக்குச் சிந்தனைகள் எவ்வாறு முற்போக்கான ஒரு பெண்ணிலைவாத ஆளுமையினை அவரின் செயற்பாடுகளுக்காக ஒன்றிணைந்து வெள்ளையடிக்க முற்படுகின்றன என்ற அரசியலை இந்த ஓவியத்தினூடாகப் பேச முன்வந்துள்ளார்.
பிற்போக்கான, எதிர்மறையான கருத்து வெளிப்பாடுகளைக் குறிக்க கிறிஸ்துநாதரின் சிலுவையின் மேலே வாசகம் பொறிக்கப்பட்டதை ஒத்த வெற்றுக் குறியீட்டை இவ்வோவியத்தில் காட்டியுள்ளார்.
வெள்ளையடித்தலின் தாக்கத்தைத் தலைமுடியின் அடிப்பகுதியில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
அவரின் உருவத்தைப் பொன்னிறத்தில் வரைந்துள்ளார் இந்த நிறத்தின் பயன்படுத்துகை அவர் ஒரு பெறுமதியான ஆளுமை என்பதைக் குறிக்கின்றது.
இந்தப் படைப்பானது டாவின்சியின் உலகப்புகழ் பெற்ற மொனாலிசா ஓவியத்தின் தன்மைகளை உள்வாங்கி வரைந்துள்ளதை உணர முடிகின்றது.
இதற்கும் காரணம் உண்டு அதாவது மொனாலிசா ஓவியம் வரையப்பட்ட போது அது நிராகரிக்கப்பட்டதாகவே இருந்தது ஆனால் காலஞ் செல்லச் செல்ல அதன் பெறுமதிகள் ஒவ்வொன்றும் அடையாளங் காணப்பட்டு அது ஓர் உலகப்புகழ் பெற்ற படைப்பாக உச்சத்திற்கு வந்தது.
இந்த வரலாற்றுப் புரிதலுடன் மொனாலிசா ஓவியத்தின் தாக்கங்களை உள்வாங்கி ‘ஹரிணி அமரசூரிய’ என்னும் ஓவியத்தை சு.நிர்மலவாசன் வரைந்துள்ளார்.
நவீன ஓவியங்களின் வரலாற்றில் உலகப் புகழ் பெற்ற படைப்புகள் பலவும் அவை ஆக்கப்பட்ட காலங்களின் பிற்போக்கான சிந்தனைகளுக்கு எதிர்வினையாற்றியவையாகவே இருந்துள்ளன என்ற அறிதலுடன் சு.நிர்மலவாசனின் இந்த ஓவியத்தைப் பார்க்கும் போது ஒரு பெறுமதியான ஆளுமை பெண் என்ற காரணத்தால் பிற்போக்கான எதிர்வினைகளுக்கு உள்ளாக்கப்பட்டமைக்கு எதிராகத் துணிவுடன் எதிர்வினையாற்றியுள்ள ஒரு காண்பியக் கலைஞனாக அவரை இனங்காட்டி நிற்கின்றது.
து.கௌரீஸ்வரன்,
17.02.2026
