செஞ்சோலை படுகொலை சம்பவத்தின் 19ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள் இன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் நடைபெற்றன.
செஞ்சோலை படுகொலை கடந்த 2006 ஆகஸ்ட் 14 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள செஞ்சோலை சிறுமிகள் இல்லத்தில் இடம்பெற்றது. இலங்கை விமானப்படை நடத்திய விமானத் தாக்குதலில் 53 பாடசாலை மாணவியர்களும், நான்கு பணியாளர்களும் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தனர்.
இந்நிலையில் இன்றைய தினம், குறித்த சம்பவம் இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் இடைக்கட்டுப்பகுதியில் உணர்வுபூர்வமான நினைவஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன. குறித்த நிகழ்வுகளில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனும் பங்கேற்று அஞ்சலி செலுத்தியிருந்தார்.
அதேவேளை, வவுனியாவில் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் சார்பிலும் செஞ்சோலை படுகொலை உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களம் முன்பாக கடந்த 3,098 நாட்களாக நடைபெற்று வரும் போராட்டப் பந்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில், உயிரிழந்தோரின் நினைவாக மலரஞ்சலி செலுத்தப்பட்டது.