செம்மணியிலிருந்து ஜெனீவாவிற்கு: நிஷ்டையில் இருக்கும் புத்தரும் நிஷ்டையில் இருக்காத எலும்புக்கூடும்! நிலாந்தன்.

 

இலங்கைத் தீவு தேரவாத பௌத்தத்தின் சேமிப்பிடம் என்று கருதப்படுகிறது. இச்சிறு தீவில் பரவலாக புத்தர் சிலைகளை வெவ்வேறு நிலைகளில் காணலாம். இருக்கின்ற, நிற்கின்ற,நிஸ்டையில் இருக்கின்ற,உறங்குகின்ற புத்தர் சிலைகள். இவ்வாறு நிஸ்டையில் இருக்கின்ற புத்தருடைய சிலைகளை வழிபடும் ஒரு நாட்டில் நிஸ்டையில் இருப்பது போன்ற தோற்றத்தைக் கொண்ட ஒரு எலும்புக்கூடு அண்மையில் செம்மணியில் அகழ்ந்தெடுக்கப்பட்டது.

அந்த எலும்பு கூட்டோடு காணப்பட்ட ஏனைய எலும்புக்கூடுகளில் இருந்து அதன் தலை சற்று தூக்கலாக மேலே தெரிந்தது என்றும் அதன் வாய் வழமைக்கு மாறாக கெழித்துப்போய்க் காணப்பட்டது என்றும் ஊடகவியலாளர்கள் கூறுகிறார்கள்.அந்த எலும்புக்கூடு நிஸ்டையில் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை தருவதனால் அதற்கு ஏதும் மத அல்லது ஆன்மீகப் பரிமாணம் இருக்கக் கூடுமா என்று சட்ட மருத்துவ அதிகாரி சந்தேகித்த காரணத்தால், யாழ்.பல்கலைக்கழகத்தின் இந்து நாகரிக துறையைச் சேர்ந்த விரிவுரையாளர் ஒருவர் செம்மணிக்கு அழைக்கப்பட்டார்.அந்த எலும்பு கூட்டுக்கு ஆன்மீகப் பரிமாணம் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது.

தேரவாத பௌத்தத்தின் ஒரே சேமிப்பிடம் என்று கூறிக் கொள்ளும் ஒரு நாட்டில் ஒரு புதை குழிக்குள் அப்படி ஒரு எலும்புக்கூடு. இச்சிறிய தீவை ஆட்சி செய்த சிங்கள பௌத்த ஆட்சியாளர்கள் மெய்யாகவே புத்த பகவானின் உபதேசங்களைப் பின்பற்றி நடந்திருந்தால் அப்படி எலும்புக் கூட்டை வைத்து ஆராய்ச்சி செய்ய வேண்டி வந்திருக்காது.

அந்த எலும்புக்கூடு அகழ்ந்து எடுக்கப்பட்ட கொஞ்ச நாட்களுக்குப் பின்,செம்மணிப் புதை குழியிலிருந்து நடந்து போகும் தூரத்தில்,செம்மணி வளைவில், கடந்த ஏழாந் திகதி கிருசாந்தி நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. அங்கே செம்மணி தொடர்பாக வெளிவந்த கவிதைகளின் தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் கிருசாந்தியோடு கொன்று புதைக்கப்பட்ட அவருடைய சகோதரர் பிரணவனின் நண்பர் ஒருவர் உரையாற்றினார். அவர் கிருசாந்தியின் தாயாருடைய இளைய சகோதரியின் மகளுடைய கணவர் ஆகும். கொல்லப்பட்ட பிரணவனின் வயதுக்காரராகிய அவர் தனது உரையில் ஒரு விடயத்தைச் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

கிருசாந்தியின் மூத்த சகோதரி இப்பொழுது புலம் பெயர்ந்து வாழ்கிறார். தனது குடும்பத்தவர்கள் சம்பந்தப்பட்ட நினைவு நிகழ்வுகளில் பங்குபற்றுவதற்கு அவர் தயாரில்லை என்று கூறப்படுகிறது. 29 ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்துக்கு நடந்த கொடுமையை இரைமீட்டக் கூடிய நிகழ்வுகளில் கலந்து கொள்வதை அவர் விரும்பவில்லையாம். ஊருக்கு வந்து தாங்கள் வாழ்ந்த வீட்டைப் பார்ப்பதற்கோ தன் குடும்பத்துக்கு நடந்த கொடுமை தொடர்பாக யாரோடும் உரையாடுவதற்கோ அவர் தயாரில்லை என்றும் அங்கே கூறப்பட்டது.29 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொடுமையை நினைவு கூர்வதன் மூலம் அவர் தன் மன நிம்மதியை இழக்கலாம் என்று அஞ்சுவதாகவும் அவர் அந்த கொடுமையான நினைவுகளில் இருந்து இன்னும் விடுபடாதவராகக் காணப்படுவதாகவும் இந்தநாடு தான் வாழ்வதற்குப் பாதுகாப்பான ஒரிடம் அல்ல என்று கருதி அவர் நாட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும், மீண்டும் இந்த நாட்டுக்குள் வர அவர் விரும்பவில்லையென்றும் அவருடைய உறவினர் செம்மணி வளைவில் உரையாற்றும் போது கூறினார்.

கிருசாந்தி கொல்லப்பட்டு 29 ஆண்டுகளின் பின் அவருடைய சகோதரியின் மனோநிலை அவ்வாறு காணப்படுகிறது.கிரிசாந்தியின் நினைவு நாளுக்கு அடுத்த நாள் அதாவது எட்டாம் திகதி ஜெனிவாவில் ஐநா மனித உரிமைகள் பேரவையின் அறுபதாவது கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதில் இலங்கை அரசாங்கத்தின் சார்பாக அமைச்சர் விஜித ஹேரத் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.

இந்த 60வது கூட்டத்தொடர் இலங்கைக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கும் என்று இலங்கையின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளரான சட்டத்தரணி பிரதிபா மஹாநாம ஹேவா கூறியுள்ளார்.

அண்மையில் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் இலங்கைக்கு வருகை தந்திருந்தார்.அதன்பின் நிகழும் இந்த ஐநா கூட்டத் தொடரில் அவர் வாசித்தளித்த அறிக்கையில் பிவருமாறு கூறப்பட்டுள்ளது..”பல தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்தி வந்த வன்முறை மற்றும் தண்டனையின்மை சுழற்சிகளிலிருந்து மீள்வதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பை இலங்கை தற்போது பெற்றுள்ளது”.இந்த அறிக்கைக்கு இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ பதில் பின்வருமாறு அமைகிறது.

“வெளிப்புற தலையீடுகள், தேசிய ரீதியான முயற்சிகளைத் தடுக்கவும் மக்களை துருவப்படுத்தவும் மட்டுமே உதவும் என்று இலங்கை அவதானித்துள்ளது. எனவே, சர்வதேச நடவடிக்கை தொடர்பாக அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள முடிவுகள் மற்றும் பரிந்துரைகளுடன் இலங்கை அரசாங்கம் உடன்படவில்லை…..

இனம், மதம், வர்க்கம் மற்றும் சாதி அடிப்படையில் எந்தப் பிரிவினையோ அல்லது பாகுபாடோ இல்லாமல் அதன் மக்களின் பன்முகத்தன்மையை மதிக்கும் மற்றும் அனுபவிக்கும் ஒரு நாட்டை நோக்கிச் செயல்படுவதற்கான ஆணையை அரசாங்கம் பெற்றுள்ளதுடன், அந்த நோக்கத்திற்காக அரசாங்கம் வலுவாகவும் உண்மையாகவும் உறுதிபூண்டுள்ளது…..

இலங்கையில் இனவெறி அல்லது தீவிரவாதம் மீண்டும் எழுவதைத் தடுப்பது அரசாங்கத்தின் முழுமையான உறுதிப்பாடாகும்.எனவே,இலங்கை ஒரு உள்நாட்டு பொறிமுறை மூலம் முன்னேறும்போது, சர்வதேச சமூகத்தின் புரிதல் மற்றும் ஆதரவை இலங்கை வரவேற்கின்றது”…..இதுதான் அந்த பதிலின் சாராம்சம்.

இலங்கை அரசாங்கத்தின் மேற்கண்ட உத்தியோகபூர்வ பதிலின்படி, வெளிநாட்டு விசாரணையானது நாட்டை துருவமயப்படுத்த உதவும் என்று கூறப்பட்டுள்ளது.ஆனால் நாடு ஏற்கனவே துருவமயப்பட்டுத்தான் உள்ளது.உள்நாட்டு விசாரணையில் நம்பிக்கை இழந்த காரணத்தால்தான் தமிழ் மக்கள் வெளிநாட்டு விசாரணையைக் கேட்கின்றார்கள்.

குறிப்பாக கிருசாந்தி தொடர்பில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய அறிக்கையில் இருந்த ஒரு விடயத்தை இங்கு சுட்டிக்காட்டலாம். இலங்கைத் தீவின் வரலாற்றில் கடந்த மூன்று தசாப்த காலத்துக்குள் பாலியல் வன்முறை தொடர்பாக நீதிமன்ற விசாரணைகளின் பின் தண்டனை வழங்கப்பட்ட ஒரு வழக்காக அது குறிப்பிடப்படுகிறது.

அப்பொழுது ஜனாதிபதியாக இருந்த திருமதி சந்திரிகா தன்னை போரால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணாகவும் போரினால் பாதிக்கப்பட்ட எல்லாருடைய பிரதிநிதியாகவும் தன்னை முன்னிறுத்தி ஆட்சிக்கு வந்தார். இப்போது உள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தைப் போலவே அப்பொழுதும் சந்திரிகா ஆட்சிக்கு வந்த பொழுது தமிழ் மக்கள் மத்தியில் ஒரு பகுதியினர் அவரை ஆர்வத்தோடும் எதிர்பார்ப்போடும் பார்த்தார்கள். அந்த ஆர்வம்,எதிர்பார்ப்புக் காரணமாக தமிழ்ப் பகுதிகளில் சந்திரிக்கா சீலை சந்திரிக்கா காப்பு என்று சந்திரிகாவின் பேரில் பொருட்கள் விற்கப்பட்டன.பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதி என்ற தன்னுடைய இமேஜைப் பாதுகாப்பதற்காக சந்திரிக்கா கிருசாந்தியின் வழக்கை அரசியல் தலையீடின்றி முன்னெடுக்க அனுமதித்தார்.
அதேசமயம் கிருசாந்தி யாழ்பாணத்தின் படித்த ஆங்கிலம் பேசும் நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் கல்வி கற்றது யாழ்ப்பாணத்தின் முன்னணி புரட்டஸ்தாந்து மகளிர் பள்ளிக்கூடம்.சமூகப் பலம்மிக்க அவருடைய உறவினர்களும் அவருக்கு தெரிந்தவர்களும் சம்பந்தப்பட்ட சட்டச் செயற்பாட்டாளர்களும் துணிந்து நீதிக்காகப் போராடினார்கள்.விளைவாக குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டார்கள்.எனினும் தப்பிச்சென்ற ஒரு குற்றவாளி இன்றுவரை தலைமறைவாக உள்ளார்.

இவ்வாறு சந்திரிகா கிருசாந்தியின் வழக்கில் தனது நீதியை நிரூபிக்க முற்பட்டு அதன் விளைவாக கிணறு வெட்டப் பூதம் கிளம்பியதுபோல அந்த வழக்கில் தண்டிக்கப்பட்ட சோமரட்ன ராஜபக்ஷ என்ற ஒரு ராணுவ லான்ஸ் கோப்ரல் தனது மேலதிகாரிகளுக்கு எதிராக வாக்குமூலம் வழங்கினார்.அந்த வாக்குமூலம்தான் செம்மணி மனிதப் புதைகுழியை வெளியே கொண்டு வந்தது.இப்பொழுதும் அவர் தன் மனைவிக்கூடாக உண்மைகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.அதில் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற விசுவாசமான விருப்பம் இருக்கிறதா?அல்லது தன்னைப் பலியாடாக்கிய உயரதிகாரிகளைப் பழிவாங்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறதா?

ஒரு ராணுவ லான்ஸ் கோப்ரல் இவ்வாறு வெளிப்படுத்தல்களைச் செய்வது சிறீலங்காவில் இதுதான் முதற்தடவை.அவர் வெளிப்படுத்தும் உண்மைகளை உள்நாட்டு நீதியின் மூலம் விசாரித்து, அவர் குறிப்பிடும் படை அதிகாரிகளை நீதியின் முன் நிறுத்தித் தண்டிப்பதற்கு அனுர அரசாங்கம் தயாராக இருக்கிறதா? அல்லது இந்த நாட்டில் இரண்டு நீதிகள் உண்டு என்ற அதே பழைய கசப்பான அனுபவம்தான் தமிழ் மக்களுக்கு மீண்டும் ஒரு தடவை கிடைக்கப் போகிறதா ? சந்திரிகா ஆட்சிக்கு வந்த போது அவருடைய பெயரில் சேலை விற்றவர்கள்,காப்பு விற்றவர்களைப் போலவே இப்பொழுது அனுரவின் காலத்தில் அவரை மாற்றத்தின் குறியீடாகக் காட்டும் தமிழர்கள் உண்டு. அதிலும் யாழ் பல்கலைக் கழகத்தின் அறிவுஜீவிகள் உண்டு. இவர்கள் அனைவரும் அரசாங்கம் மனித உரிமைகள் ஆணையத்துக்கு வழங்கிய பதிலில் கூறப்படுவதுபோல உள்நாட்டு நீதியானது இனங்களை துருவ மயப்படுத்தாது என்பதனை நிரூபிப்பதற்காக உழைப்பார்களா?

 

The post செம்மணியிலிருந்து ஜெனீவாவிற்கு: நிஷ்டையில் இருக்கும் புத்தரும் நிஷ்டையில் இருக்காத எலும்புக்கூடும்! நிலாந்தன். appeared first on Global Tamil News.

நன்றி

Leave a Reply