
2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி ஆண்களுக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து பங்களாதேஷ் அணி அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. பங்களாதேஷ் அணியின் இந்த முடிவைத் தொடர்ந்து, அந்த இடத்திற்கு ஸ்கொட்லாந்து அணி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக International Cricket Council (ICC) உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் நடைபெறவுள்ள போட்டிகளில் பங்கேற்பதற்கு பாதுகாப்பு தொடர்பான காரணங்களை முன்வைத்து பங்களாதேஷ் அணி மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. போட்டிகளை இலங்கைக்கு மாற்றுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்திருந்த போதிலும், அதை ஐசிசி நிராகரித்தது. இதன் பின்னணியிலேயே பங்களாதேஷ் அணியைத் தொடரிலிருந்து நீக்கும் இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஐசிசி தரவரிசை அடிப்படையில் தகுதி பெறாத அணிகளில் முன்னிலையில் இருந்த ஸ்கொட்லாந்து அணிக்கே இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஸ்கொட்லாந்து அணி குழு ‘C’ இல் இணைகிறது. அந்தக் குழுவில் இத்தாலி, நேபாளம், மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுடன் ஸ்கொட்லாந்து பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
ஸ்கொட்லாந்து அணி தனது முதல் போட்டியை எதிர்வரும் பெப்ரவரி 7ஆம் திகதி மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக விளையாடவுள்ளது.
