தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம் இன்றும் தொடர்கிறது!

நாடு தழுவிய ரீதியில் தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் இன்றும் (19) தொடரும் என்று ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.

19 கோரிக்கைகளை முன்வைத்து நேற்று முன்தினம் (17) மாலை தொடங்கிய வேலைநிறுத்தம் மிகவும் வெற்றிகரமாக நடந்து வருவதாக முன்னணியின் இணை ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.

தங்கள் கோரிக்கைகள் முறையாக தீர்க்கப்படும் வரை வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும், இன்று தங்கள் பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதியிடம் மகஜர் ஒன்றை கையளிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே, வேலைநிறுத்தம் குறித்து தனது கருத்தை வெளியிட்ட தபால் மா அதிபர் ருவன் சத்குமார, தபால் ஊழியர்களின் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளதாகக் கூறினார்.

வேலைநிறுத்தத்தைக் கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்க்குமாறு தபால் தொழிற்சங்கங்களைக் கேட்டுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம், நியாயமான சம்பளம் மற்றும் மேலதிக நேர கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், தபால் ஊழியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு நியாயமற்றதென சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அத்துடன், பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டு பணிக்கு திரும்புமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

நன்றி

Leave a Reply