“திமுக கூட்டணிக்கு எதிரான சதி திட்டங்கள் நிறைவேறாது” – சேலம் கம்யூ. மாநாட்டில் மு.க.ஸ்டாலின் உறுதி | cm stalin full speech in salem CPI conference

சேலம்: “ஜனநாயகத்துக்கு எதிரானவர்கள் திமுக கூட்டணியை விரும்பவில்லை. அதனால், நம்மிடையே பிளவு ஏற்படுத்த நினைக்கின்றனர். அவர்களது சதி திட்டங்கள் ஒருபோதும் நிறைவேறாது” என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில மாநாட்டில், முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினார்.

சேலத்தில் சனிக்கிழமை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26-வது மாநில மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியது: “எல்லோருக்கும் எல்லாம் என்ற லட்சியத்துடன் திராவிட இயக்கங்களோடு கம்யூனிஸ்டுகள் கொள்கை உறவு கொண்டுள்ளன. இந்தக் கொள்கை உறவு எப்போதும் நீடிக்க வேண்டும். அப்போதுதான் தலைமுறைகள் காப்பாற்றப்படும்.

சேலம் சிறையில் 22 கைதிகள் 1950-ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த நாளை கண்டன நாளாக அறிவித்த பெரியார், ஊரடங்கு ஊர்வலங்களை நடத்தினார். அங்கு கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கையை ஏற்று மணி மண்டபம் அமைக்கப்படும்.

திமுக தோழமைக் கட்சிகளின் ஒற்றுமை, பலரின் கண்களை உறுத்துகிறது. இந்தக் கூட்டணியை உடைக்க எத்தனையோ சதிச் செயல்களையும், பொய்ச் செய்திகளையும் பரப்பப்புகின்றனர். அதில் முக்கியமானவர் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி. அவருக்கு கம்யூனிஸ்ட் கட்சிகளின் மேல் குபீர் பாசம் பொங்குகிறது.

அடிமைத்தனம் பற்றி பழனிசாமி பேசலாமா? எங்களைப் பொறுத்தவரை யாரும் யாருக்கும் அடிமை இல்லை. எங்களது இயக்கம் அடிமைத்தனத்துக்கு எதிரானது. அந்தக் கொள்கை தெரியாமல் பழனிசாமி கொச்சைப்படுத்தி பேசுகிறார். கம்யூனிஸ்ட் தலைவர்களை விட, திருமாவளவனை விட , எடப்பாடி என்ன தியாகம் செய்துவிட்டார்? அவர் நிரூபிக்க முடியுமா? மக்கள் பிரச்சனைக்காக போராடும் இயக்கங்களை புழுதி வாரி தூற்றுகிறார்.

கூட்டணியில் இருந்தாலும் நியாயமான கோரிக்கைகளை வைக்க கம்யூனிஸ்டுகள் தவறுவதில்லை. நாங்களும், அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொண்டுதான் வருகிறோம். இதுதான் ஜனநாயகம். அதனால்தான் தோழமை தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

எங்களைப் பொறுத்தவரை வகுப்புவாதம், மேலாதிக்கம் , எதேச்சதிகாரம் ஆகியவற்றுக்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒற்றுமையாக போராட வேண்டும். எங்கள் லட்சியம் பெரிது, அந்த லட்சியத்துக்காகத்தான் எல்லோரும் போராடி வருகிறோம். ஆனால், ஜனநாயகத்துக்கு எதிரானவர்கள் நம்முடைய கூட்டணியை விரும்பவில்லை. அதனால், நம்மிடையே பிளவு ஏற்படுத்த நினைக்கின்றனர். அவர்களது சதி திட்டங்கள் ஒருபோதும் நிறைவேறாது.

ஜனநாயகம்தான் இறுதியில் வெல்லும். அதை வெல்ல வைக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் நமக்கு உள்ளது. ஜனநாயகத்துக்கு அடிப்படையான தேர்தல் ஆணையத்தை பாஜக தனது கிளை அமைப்பாக மாற்றிவிட்டது. தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில்தான் சதி செய்கிறார்கள் என்று பார்த்தால், வாக்காளர் பட்டியலிலும் சதி செய்துள்ளனர். மக்களாட்சியை பாதுகாத்த இந்த சதித்திட்டத்தை அம்பலப்படுத்திய ராகுல் காந்திக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகம் உள்பட பிற மாநிலங்களில் தேர்தல் நடைமுறைகள் தொடங்குவதற்கு முன்பாக, சுதந்திரமான நேர்மையான முறையில் வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணியை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.

பாஜகவை பற்றி திமுக சொன்னதெல்லாம் நடந்து வருகிறது. சமஸ்கிருதத்துக்கு முக்கியத்துவம், குருகுலத்தில் படித்தவர்களுக்கு ஐஐடியில் பணி, சுதந்திர தின விழாவில் ஆர்எஸ்எஸ் பற்றி புகழ்ந்து பேசியது, அரசு விளம்பரங்களில் சாவர்க்கர் படம் என அவல நிலை ஏற்பட்டுள்ளது.

உறவினர் வீட்டில் அமலாக்கத் துறை ரெய்டு என்றால், ஓடிவந்து கூட்டணியில் சேர்வதற்கு நாங்கள் என்ன பழனிச்சாமியா? எங்களை மிரட்ட நினைப்பவர்கள், இன்று மிரண்டு போயிருக்கிறார்கள்.

மொழி உரிமை, சமூக நீதி, நவீன தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு யார் காரணம் என்பது மக்களுக்கு தெரியும். தமிழக மக்கள் அரசியல் தெளிவு பெற்றவர்கள். அவர்கள் உங்களுக்கு தோல்வியைத்தான் கொடுப்பார்கள். திமுக – கம்யூனிஸ்ட் கூட்டணிக்கு முன்னால் எப்பேர்பட்ட சதியும் நிற்க முடியாது. 2021 போல 2026 தேர்தலிலும் வெற்றி தொடரும். திராவிட மாடல் 2.0 ஆட்சி உருவாகும். இதற்கு கம்யூனிஸ்ட் தோழர்களும் உடன் இருக்க வேண்டும். ஜனநாயகம் காக்க களத்தில் இருக்கும் கம்யூனிஸ்டுகளுக்கு எனது ரெட் சல்யூட்” என்றார் முதல்வர் ஸ்டாலின்.

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள நேரு கலையரங்கில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26-வது தமிழ்நாடு மாநில மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் ராஜா, மாநிலத் தலைவர் முத்தரசன், காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நன்றி

Leave a Reply