முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவ கண்காணிப்பில் வைக்க பரிந்துரைத்துள்ளதால், இன்று (26) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவது சாத்தியமில்லை என்று சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜூம் தொழில்நுட்பம் அல்லது வேறு வழியில் சட்ட நடவடிக்கைகளுக்காக முன்னிலைப்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டால், அதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய முடியும் என்றும் அவர் மேலும் கூறினார்.
அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டின் பேரில் குற்றப் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
சம்பவம் தொடர்பாக கடந்த 22 ஆம் திகதி கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதியை இன்று வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அன்றைய தினம் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், மருத்துவ பரிந்துரையின் பேரில், மறுநாள் கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அதன்படி, முன்னாள் ஜனாதிபதி தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார், இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
இந்நிலையிலேயே, சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.