நாட்டின் சட்டம் சில புலனாய்வாளர்களின் தனிப்பட்ட ஆசைகளின் பிடிக்குள் சிக்கியுள்ளது

நாட்டில் சட்டம் தற்போது சில புலனாய்வாளர்களின் தனிப்பட்ட ஆசைகளின் பிடிக்குள் சிக்கிக்கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குற்றம்சாட்டியுள்ளது.

கபில சந்திரசேனவிடம் கட்டாயப்படுத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டதைப் போன்று, எதிர்காலத்தில் எந்தவொரு பிரஜையும் விசாரணையாளரின் கட்டாயத்திற்கு உட்படுத்தப்பட்டு அநீதிக்கு உள்ளாகலாம் என பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.

அக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

சட்டம் தற்போது சில புலனாய்வாளர்களின் தனிப்பட்ட ஆசைகளின் பிடிக்குள் சிக்கிக்கொண்டிருக்கின்றது. சட்டத்தைப் பற்றி நான் இதுவரை கேள்விப்பட்ட மிகச்சிறந்த வரையறை ‘ஆசைகளின் ஆதிக்கமற்ற பகுத்தறிவு’ என்பதாகும். ஆனால், தற்போது சட்டம் சில புலனாய்வாளர்களின் தனிப்பட்ட ஆசைகளின் பிடிக்குள் சிக்கியிருப்பது தெளிவாகத் தெரிவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு ஆதாரமாக கபில சந்திரசேன வழங்கிய வாக்குமூலம் தம்மிடமுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த வாக்குமூலத்திள் உள்ளடக்கங்கள் மிகவும் பாரதூரமானவை மற்றும் சர்ச்சைக்குரியவையாகும். அந்த வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கமைய ரங்க திஸாநாயக்க தன்மை அச்சுறுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் பாரதூரமான ஒரு விடயமாகும் என்றும் சஞ்சீவ எதிரிமான்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயத்தை ஒரு அரசியல் கட்சி தனது குறுகிய அரசியல் நோக்கத்திற்காகச் செய்யும் ஒன்றாகக் கருதாமல், பரந்த சட்ட ரீதியான சமூக நீதிக்கான ஒரு விடயமாகப் புரிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

எதிர்காலத்தில் எந்தவொரு பிரஜையும் இதுபோன்ற ஒரு விசாரணையாளரின் கட்டாயத்திற்கு உட்படுத்தப்பட்டு அநீதிக்கு உள்ளாகலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Post Views: 0

நன்றி

Leave a Reply