தஞ்சாவூர்: காவிரி டெல்டாவில் தற்போது குறுவை, சம்பா சாகுபடிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. குறுவை பருவத்தில் 5.66 லட்சம் ஏக்கரில் நடவுபு் பணிகள் முடிவடைந்துள்ளன. இதேபோல, சம்பா பருவத்துக்கு 9.70 லட்சம் ஏக்கர் திட்டமிட்டு நாற்றங்கால் தயாரிப்பும், நடவும் ஆங்காங்கே செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நெற்பயிருக்கு தேவையான உரங்களை இலைவழியாக வழங்கவும், பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்கவும் தற்போது ட்ரோன்களை வாடகைக்கு எடுத்து விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
ஏக்கருக்கு ரூ.450 வீதம் வாடகை வசூலிக்கும் தனியார் ட்ரோன் இயக்குபவர்கள், 10 ஏக்கருக்கு மேல் இருந்தால் வயலுக்கு வந்து நேரடியாக பார்வையிட்டு, ட்ரோன் மூலம் மருந்துகளை தெளித்து வருகின்றனர்.
ட்ரோன் மூலம் தெளிப்பதால் நெற்பயிருக்கு இலைவழியாக மருந்துகள் சீராக கிடைக்கின்றன. இதனால் பயிர்கள் நன்றாக வளரவும், அதே நேரத்தில் குருத்துப் பூச்சிகள், கருப்பு வண்டுகள், ஆணைக் கொம்பன் உள்ளிட்ட பல்வேறு பூச்சிகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஒரு ஏக்கருக்கு ரூ.4 ஆயிரத்துக்கு மருந்துகளை வாங்கி, அதை கை ஸ்பிரேயர் மூலம் தெளித்தால் மருந்துகள் விரயமாகும். ஆனால் ட்ரோன் மூலம் சீராக தெளிப்பதால் மருந்துகளின் செலவு 50 சதவீதம் குறைகிறது.
இதேபோல, ஸ்பிரேயர் மூலம் விவசாயக் கூலித் தொழிலாளி 5 ஏக்கர் நிலத்துக்கு நாள் முழுவதும் மருந்து தெளிக்க வேண்டும். ஆனால் ட்ரோன் மூலம் 2 மணிநேரத்தில் மருந்து தெளிக்கப்படுவதால், நேரமும், மருந்துக்கான செலவும் மிச்சமாவதால் விவசாயிகள் இந்த முறைக்கு அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தமிழக விவசாயிகள் சங்க டெல்டா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ப.ஜெகதீசன் கூறியது: விவசாயத்தில் அவ்வப்போது நவீன முறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை மருந்து தெளிக்க, அடியுரம் தெளிக்க கூலித் தொழிலாளர்கள் பயன்படுத்தப்பட்டு வந்தனர்.
அவர்களுக்கான பற்றாக்குறையும் அவ்வப்போது ஏற்பட்டு விவசாயிகள் செய்வ தறியாது திகைத்து வந்தனர். தற்போது பல இடங்களிலும் மருந்துகளை தெளிக்க ட்ரோன் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் நேரம், செலவு மிச்சமாகிறது. இதேபோல, யூரியா போன்ற அடியுரமும் தற்போது நானோ யூரியா என மருந்து திரவ வடிவில் வந்துவிட்டதால், ட்ரோன் பயன்பாடு என்பது விவசாயிகளிடம் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.
பெரும் விவசாயிகள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் உள்ள ட்ரோன்களை, சிறு- குறு விவசாயிகளும் யன்படுத்தும் வகையில், வேளாண்மை பொறியியல் துறையினர் ட்ரோன்களை அதிகளவில் விவசாயிகளுக்கும், இளைஞர்களுக்கும் மானிய விலையில் வழங்க முன்வர வேண்டும். மேலும், வேளாண்மை பொறியியல் துறை மூலம் டிராக்டர் போன்றவற்றை விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்குவதுபோல, ட்ரோன் மூலம் மருந்துகளை தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
வேளாண் அதிகாரிகள் கூறியது: ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பதால் பயிருக்கு சீரான சத்துகள் கிடைக்கின்றன. வேளாண்மைத் துறை அலுவலர்கள் ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பதை ஊக்கப்படுத்தி வருகின்றனர். தற்போது பெரும்பாலான இளைஞர்கள் ட்ரோன்களை வைத்து மருந்து தெளித்து வருகின்றனர்.
ட்ரோன் வாங்க அரசு அதற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் பணியாளர் நியமனம் செய்தால் வேளாண் பொறியியல் துறை மூலம் இந்த முறையை மேலும் அனைத்து விவசாயிகளிடமும் கொண்டு செல்ல முடியும். அதற்கு தமிழக அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்றனர்.