54
மன்னார் பகுதியில் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றங்களுக்கு உடந்தையாக இருந்ததாக கைது செய்யப்பட்ட 66 வயதுடைய பெண் இன்று (16) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது மன்னார் நீதவான், குறித்த பெண்ணை தலா ரூ. 20 மில்லியன் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்டார்.
காவல்துறையினா் தெரிவித்ததாவது, தென்னிந்தியாவில் இருந்து இலங்கைக்கு 2019 முதல் 2023 வரை போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர், அந்த வருமானத்தை பயன்படுத்தி ஒரு மாடி குடியிருப்பு, ஐந்து அறைகள் கொண்ட வீடு, ஒரு கார் மற்றும் சுமார் 360 பவுண் தங்க நகைகள் வாங்கியுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் தொடங்கப்பட்டன. பின்னர், அந்த தங்க நகைகள் பல நிதி நிறுவனங்களில் அடகு வைக்கப்பட்டு மீண்டும் மீட்கப்பட்டு, மன்னார் பகுதியில் உள்ள நகைக் கடைகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்தது.
மேலும் விசாரணைகளில், முக்கிய சந்தேகநபரின் மாமியாரான 66 வயது பெண், இந்த தங்க நகைகளை அதன் சட்டவிரோத மூலத்தை அறிந்திருந்தும் அடகு வைத்து பின்னர் விற்றதாக தெரியவந்ததால், அவர் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நேற்று (15) கைது செய்யப்பட்டார். சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இன்று அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இவ்வாறு அவா் பிணையில் விடுவிக்கப்பட்டாா். இந்த வழக்கு தொடர்பான அடுத்த விசாரணை மே 27 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
#MannarCourt #BailGranted #MoneyLaunderingSL #AssetSeizure #JaffnaMannarNews
