பத்தும் நிஸங்க அரைசதம்; 4 விக்கெட்டுகளால் சிம்பாப்வேயை வீழ்த்திய இலங்கை!

ஹராரேவில் புதன்கிழமை (03) நடைபெற்ற மூன்று போட்டிகளை கொண்ட டி:20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இலங்கை அணி சிம்பாப்வேயை நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் பத்தும் நிஸங்க ஆதிக்கம் செலுத்தியதுடன், கமிந்து மெண்டீஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஒருநாள் தொடரினை ஏற்கனவே 2:0 என்ற கணக்கில் சொந்த மண்ணில் பறிகொடுத்துள்ள சிம்பாப்வே வெற்றிக்கு திரும்பும் நோக்குடன் இந்தப் போட்டியில் களம் இறங்கியது.

இலங்கை நேரப்படி நேற்று (03) மாலை 05.00 மணியளவில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியானது துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை எதிர் அணிக்கு வழங்கியது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே தொடக்க துடுப்பாட்ட வீரர் பிரையன் பென்னட்டின் 81 ஓட்டங்கள் காரணமாக 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 175 ஓட்டங்களை எடுத்தது.

பென்னட்டுக்கு அடுத்த படியாக அணித் தலைவரும், ஐசிசி ஆடவர் ஒருநாள் சகலதுறை துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் முதலிடத்துக்கு வந்துள்ள சிக்கந்தர் ராசா 28 ஓட்டங்களை எடுத்தார்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் துஷ்மந்த சமிர அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

பின்னர் இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, ஐந்து பந்துகள் மீதமுள்ள நிலையில் ஆறு விக்கெட்டுகளை இழந்த நிலையில் 177 ஓட்டங்களை எடுத்தது.

இலங்கை அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பத்தும் நிஸங்க 32 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கலாக 55 ஓட்டங்களை எடுத்தார்.

இது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவரது 15 ஆவது அரைசதமாகும்.

27 வயதான வலது கை துடுப்பாட்ட வீரர் நிஸங்க, ஒருநாள் சர்வதேச தொடரின் வெற்றியில் அரைசதம் மற்றும் சதத்துடன் முக்கிய பங்கு வகித்தார்.

நிஸங்கவின் ஆட்டமிழப்புடன் இலங்கை அணி, அடுத்த 19 பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை பறிகொடுத்தன.

அதன்படி, இலங்கை அணி 10 ஓட்டங்களுக்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்து, 106-4 என்ற நிலையுடன் போராடியது.

இருப்பினும், கமிந்து மெண்டிஸ் 16 பந்துகளில் நான்கு சிக்ஸர்கள் உட்பட ஆட்டமிழக்காமல் 41 ஓட்டங்களை எடுத்து இன்னிங்ஸை நிலைப்படுத்தினார்.

அவருக்கு பக்க பலமாக துஷான் ஹேமந்த 14 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியாக இலங்கை 19.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 177 ஓட்டங்களை எடுத்து தொடரில் முன்னிலை பெற்றது.

சிம்பாப்வே அணி சார்பில் பந்து வீச்சில் ரிச்சர்ட் ந்காரவா நான்கு ஓவர்களில் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் ஆட்டநாயகனாக கமிந்து மெண்டீஸ் தெரிவானர்.

இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி:20 போட்டியானது நாளை மறுதினம் (06) ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Image

நன்றி

Leave a Reply