இந்தியாவிற்கு எதிராகப் பயங்கரவாதச் செயல்களை மேற்கொள்ள சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் ஆறு உக்ரேனிய நாட்டினரும் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவரும் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் பல NIA குழுக்களால் ஒருங்கிணைந்த நடவடிக்கையில் மேற்கொள்ளப்பட்ட இந்த கைதுகள், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA) பிரிவு 18 இன் கீழ் மற்றும் பிற தொடர்புடைய பிரிவுகளின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை மாலை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
அமெரிக்காவைச் சேர்ந்த அந்த நபர் கொல்கத்தா விமான நிலையத்தில் குடிவரவுத் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டார்.
மேலும், ஆறு உக்ரேனியர்கள் லக்னோ மற்றும் டெல்லி விமான நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டனர்.
குற்றம் சாட்டப்பட்டவர் செல்லுபடியாகும் விசாக்களில் இந்தியாவிற்குள் நுழைந்ததாகவும், ஆனால் கட்டாய தடைசெய்யப்பட்ட பகுதி அனுமதி இல்லாமல் மிசோரமுக்குச் சென்றதாகவும் ஒரு வட்டாரம் தெரிவித்தது.
அங்கு, இந்தியாவிற்கு விரோதமான இனக் குழுக்களை அவர்கள் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், ஐரோப்பாவிலிருந்து வந்த பல ட்ரோன் சரக்குகளை அவர்கள் மிசோரம் மாநிலத்தில் கொண்டுவந்து சேர்த்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது என்றும் அந்த வட்டாரம் தெரிவித்தது.
சந்தேக நபர்கள் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டு, சனிக்கிழமையன்று நீதிபதி முன் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
அவர் அவர்களை மூன்று நாட்கள் நீதிமன்றக் காவலில் வைத்தார்.
சந்தேக நபர்களுக்கான தடுப்புக் காவல் திங்கட்கிழமையன்று மீண்டும் 11 நாட்கள் நீட்டிக்கப்பட்டு மார்ச் 27 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.
அந்தக் குழு பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிட்டு வந்ததாகவும், அவர்களின் நடமாட்டம் எல்லை தாண்டிய அச்சுறுத்தல்கள் குறித்து கவலையை ஏற்படுத்தியதாகவும் NIA குற்றம் சாட்டியுள்ளது.
