பலஸ்தீனத்தை ஆதரிக்கும் அனுர – தமிழ் மக்கள் தொடர்பில் அலட்டிக்கொள்ளமாட்டார்!

பலஸ்தீனத்தை ஆதரிக்கும் அனுர தமிழ் மக்கள் தொடர்பில் ஒருபோதும் அலட்டிக்கொள்ளமாட்டார் என ஐக்கிய சோசலிச கட்சியின் முக்கியஸ்தர் ஸ்ரீதுங்க ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

அனுர அரசும் முன்னைய அரசுகளுக்கு நிகரான அரசுதான் என்பதை நிரூபித்து வருகின்றது எனவும்
தேர்தல் மேடைகளில் கூறியவற்றை மறந்து மக்களை திசை திருப்பி தங்களின் ஆட்சியை கொண்டு செல்லவே பாடுபடுகின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர் ,

அனுர ஒரு சந்தர்ப்பவாதி, அமெரிக்கவின் நிகழ்ச்சி நிரலில் இருந்து நாட்டை சீரழிக்கும் ஒருவர், அமெரிக்கா என்ன நினைக்கின்றதோ அதையே நாட்டில் முன்னெடுத்து வருகின்றது.

இதேநேரம் சர்வாதிகரம் கொண்ட அனுரவுக்கு நாட்டில் புரையோடிக் கொண்டிருக்கும் அரசியல் பிரச்சினையை தீர்க்க ஒரு கையொப்பம் போதும், ஆனால் அதை அவர் செய்யமாட்டார்.

யாழ் மக்களுக்கு சர்வதேச மைதானம் அவசியமாக இருந்தாலும் அதைவிட அவசியமானவை எண்ணற்ற அளவில் இருக்கின்றன.

ஆனால் அனுர அரசு மைதானத்தை காட்டி தமிழ் மக்களின் பிரச்சினைகளை மூடிமறைக்க முயல்கிறது.

வடக்கில் இருந்து பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றம் சென்றாலும் அவர்களில் ஒருவர் கூட அமைச்சராக பொறுப்புக் கொடுக்காத அரசு இது.

வடக்கில் வந்து பேதங்கள் அற்ற ஆட்சி செய்வதாக கூறும் அனுர, தனது ஆட்சியில், அமைச்சரவையில் தமிழ் முஸ்லிம் சமூகங்களை ஓரங்கட்டி வைத்திருக்கின்றது.

இதேநேரம் யாழ்ப்பாணம் சாரா ஒருவரை யாழ்பாணத்தின் அமைச்சராக்கி யாழ் மக்களை இழிவுபடுத்தும் செயலே முன்னெடுக்கப்படுகின்றது.

இதற்கு காரணம் இலங்கை தமிழர் ஒருவர் அமைச்சரானால் தமிழ் மக்கள் பிரச்சினைகள் குறித்த தீர்வுக்கு குடைச்சல் கொடுப்பார் என்பதால் தான் அமைச்சு கொடுக்கபடவில்லை, இதுவே உண்மை.

பலஸ்தீனத்ததை ஆதரித்து ஐ.நாவில் கருத்துக் கூறும் அனுர இலங்கை தமிழ் மக்கள் தொடர்பில் ஒருபோதும் அலட்டிக்கொள்ள மாட்டார். ஏனெனில் அனுர ஓர் இனவாத குடும்பத்தின் பின்னணியில் இருந்து வந்தவர்.

மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் சதித்திட்டத்தை முன்னெடுக்கின்றது. இதை முறியடிக்க வேண்டும்.

நாட்டில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதுடன் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய அனுர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதுமட்டுமல்லாது வடக்கு கடற்றொழில் சமூகத்தின் பிரச்சினைகளை உடனடியாகத் தீர்த்து வைக்கப்பட வேண்டும் என்பதுடன் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள மக்களின் பாரம்பரிய பூர்வீக காணிகளை உடனடியாக விடுவிக்கவும் அனுர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேவேளை சுயநிர்ணய உரிமைகளின் அடிப்படையில் தேசியப் பிரச்சினையைத் தீர்த்து வைக்க இந்த அரசு முயற்சி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நன்றி

Leave a Reply