பாகிஸ்தானில் திடீர் வெள்ளத்தில் சிக்கி 300+ பேர் உயிரிழப்பு | Flash floods in Pakistan: 307 killed in northwest part of country

பெஷாவர்: பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பெய்த திடீர் அடைமழை காரணமாக 13 குழந்தைகள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக கைபர் பக்துன்க்வா மாகாண பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ஃபைசி கூறியது: கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் பஜோர், புனேர், ஸ்வாட், மனேஹ்ரா, ஷாங்லா, டோர்கர், படாகிராம் மாவட்டங்களில் கடந்த 48 மணி நேரத்தில் மிக அதிக கனமழை பெய்தது. மேக வெடிப்புகளால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 307 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில், 279 பேர் ஆண்கள், 15 பேர் பெண்கள், 13 பேர் குழந்தைகள். 23 பேர் காயமடைந்துள்ளனர்.

புனேர் நகரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு 184 பேர் உயிரிழந்துள்ளனர். ஷாங்லாவில் 36 பேரும், மன்சேராவில் 23 பேரும், ஸ்வாட்டில் 22 பேரும், பஜோரில் 21 பேரும், பட்டாகிராமில் 15 பேரும் உயிரிழந்துள்ளனர். அபோட்டாபாத்தில் ஒரு குழந்தை நீரில் மூழ்கி இறந்துள்ளது. இதுவரை 74 வீடுகள் சேதமடைந்துள்ளன. இவற்றில், 11 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கைபர் பக்துன்க்வா முதல்வர் அலி அமின் கந்தாபூரின் உத்தரவின் பேரில், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்துமாறு முதல்வர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். வானிலை முன்னெச்சரிக்கைத் தகவல்களை அறிந்து முடிவுகளை எடுக்குமாறு சுற்றுலாப் பயணிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மழை வெள்ளத்தால் பலர் காணாமல் போயுள்ளனர். எனவே, உயிரிழந்தவர்கள் மற்றம் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை உயரக்கூடும்” என்று அவர் கூறியுள்ளார்.

நன்றி

Leave a Reply