ராமேசுவரம்: பாம்பன் மீனவர் வலையில் அரிய வகையான கூறல் மீன் இரண்டு சிக்கின. 46 கிலோ எடை கொண்ட இந்த மீன்கள் ரூ.1.65 லட்சத்துக்கு விற்பனையாகின. ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில் மன்னார் வளைகுடா பகுதியிலிருந்து நேற்று முன்தினம் 90-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இவர்கள் மீன்பிடித்து விட்டு நேற்று கரை திரும்பினர்.
இதில் மீனவர் ஒருவரின் வலையில் 22 மற்றும் 24 கிலோ எடையிலான 2 கூறல் மீன்கள் சிக்கியிருந்தது தெரியவந்தது. மொத்தம் 46 கிலோ எடை கொண்ட இந்த மீன்கள் கிலோ ரூ.3,600 வீதம் ரூ.1,65,600-க்கு ஏலத்தில் விலைபோயின.
இருந்து எடுக்கப்பட்ட நெட்டி.
இதுகுறித்து பாம்பன் மீனவர்கள் கூறும்போது, “கூறல் மீனை உணவுக்காகப் பயன்படுத்துவதில்லை. கூறல் மீனின் வயிற்றுப் பகுதியில் காற்றுப்பை ரப்பர் டியூப் போன்ற வடிவத்தில் (பிஷ் மாவ்ஸ்) நெட்டி காணப்படும்.
இந்த நெட்டியை பீர், ஒயின் போன்ற மதுபானங்கள் மற்றும் ஜெல்லி மிட்டாய் போன்றவைகளை சுவையாகவும், கெட்டுப் போகாமல் இருக்கவும் பயன்படுத்துகின்றனர். கிழக்கு ஆசிய நாடுகளில் இந்த நெட்டிகளைக் கொண்டு விலை உயர்ந்த சூப் தயாரிக்கப்படுகிறது” என்றனர்.
