பாலைதீவு படகு விபத்து: உயிரிழப்பு எண்ணிக்கை மூன்றாக அதிகரிப்பு!

பாலைதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவிற்குச் சென்ற பக்தர்களின் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில், சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் உயிரிழந்ததையடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் 27ஆம் திகதிக்கும் மார்ச் 6ஆம் திகதிக்கும் இடைப்பட்ட திருவிழா காலத்தில், குருநகர் இறங்குதுறையிலிருந்து பக்தர்களை ஏற்றிச் சென்ற படகு நடுக்கடலில் விபத்துக்குள்ளானது. இந்தத் துயரச் சம்பவத்தில் அன்றைய தினமே இருவர் உயிரிழந்த நிலையில், சிறுவன் ஒருவன் உள்ளிட்ட 13 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 5 நாட்களாகத் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த எட்வேட் உதயகுமாரி (64 வயது) என்பவர், நேற்றுச் செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து தொடர்பாகக் காவற்துறையினர் மற்றும் கடற்படையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அனுமதிக்கப்பட்ட அளவை விட மேலதிக பயணிகள் படகில் ஏற்றப்பட்டதே விபத்துக்குக் காரணம் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது உயிரிழந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகளின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. பாலைதீவு அந்தோனியார் ஆலயத் திருவிழா பக்தர்களிடையே இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post பாலைதீவு படகு விபத்து: உயிரிழப்பு எண்ணிக்கை மூன்றாக அதிகரிப்பு! appeared first on Global Tamil News.

நன்றி

Leave a Reply