இதன் மூலம் பிரான்ஸின் மிக இளம் வயது மக்கள் பிரதிநிதிகளில் ஒருவராக அவர் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தில், 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரான்ஸில் பிறந்த பிலால் லுக்மான், தற்போது பாரிஸ்-பந்தியோன்-அசாஸ் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு சட்ட மாணவராகப் பயின்று வருகிறார்.
கடந்த மார்ச் 15 மற்றும் 22 ஆம் திகதிகளில் நடைபெற்ற பிரான்ஸ் நகராட்சித் தேர்தல்களில், அவர் தனது கன்னி வாக்கைப் பதிவு செய்த அதேவேளை, வேட்பாளராகவும் களமிறங்கி வெற்றி பெற்றுள்ளார். தற்போது பதவியில் உள்ள மேயரின் அணியில் இணைந்து அவர் இந்தப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொண்டார்.
சிறு வயது முதலே பொது விவகாரங்களில் அதீத ஆர்வம் காட்டிய பிலால், தனது 15 மற்றும் 16 வயதிலேயே பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அலுவலகம், முன்னாள் கல்வி அமைச்சரின் அலுவலகம் மற்றும் உள்ளூர் மேயரின் அலுவலகம் ஆகியவற்றில் பயிற்சிகளைப் பெற்றுள்ளார். அத்துடன், பாராளுமன்றத் தலைவர் மற்றும் பல இராஜதந்திரிகளுடனும் அரசியல் ரீதியான கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளார்.
பாடசாலைக் காலத்திலிருந்தே சிறுவர் நகரசபை மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்களின் ஊடாக சமூகப் பணிகளில் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.
தமது வெற்றி குறித்துக் கருத்துத் தெரிவித்த பிலால் லுக்மான்:
“நாம் எங்கிருந்து வருகிறோம் அல்லது எத்தகைய பாதையில் வந்தோம் என்பது முக்கியமல்ல. நாம் இணைந்து எதனைக் கட்டியெழுப்புகிறோம் என்பதே முக்கியமானது. அரசியல் என்பது அர்த்தமற்றது என்று கருதுவதை மக்கள் நிறுத்த வேண்டும்,” எனத் தெரிவித்தார்.
தனது கல்விப் பணிகளுக்கு மத்தியில், ஒரு மக்கள் பிரதிநிதியாக இளைஞர்களை அரசியலில் ஈடுபடுத்தவும் சமூக மேம்பாட்டிற்காகவும் உழைப்பதே தனது இலட்சியம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

