புதுடெல்லி: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு அச்சு ஊடகங்களுக்கான விளம்பரக் கட்டணங்களை 27% உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை உயர் அதிகாரி ஒருவர் நேற்று கூறும்போது, “பாரம்பரிய ஊடகங்களில் பல மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. இத்துறையில் பணிபுரிவோரின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் அச்சு, தொலைக்காட்சி மற்றும் திரைப்படத் துறைகளில் பல சீர்திருத்தங்களை அரசு அறிமுகப்படுத்தி வருகிறது.
பிஹாரில் தேர்தல் நடத்தை விதிகள் முடிந்தவுடன் அச்சு ஊடக விளம்பரங்களுக்கான கட்டணம் 27% உயர்த்தப்படுவது தொடர்பான அறிவிப்பு வெளியாகும்” என்றார். 6 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக அச்சு ஊடக விளம்பரக் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. இதன்மூலம், பெரும்பாலும் அரசு விளம்பரங்களை நம்பி உள்ள பிராந்திய அளவிலான வெளியீட்டாளர்கள் உட்பட சிறிய மற்றும் பெரிய செய்தித்தாள் நிறுவனங்கள் பலன் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு கடந்த 2019-ம் ஆண்டு அச்சு ஊடக விளம்பரக் கட்டணம் 25% உயர்த்தப்பட்டது. அதற்கு முன்பு 2013-ல் 19% உயர்த்தப்பட்டது. இதுபோல தொலைக்காட்சி விளம்பரக் கட்டணங்களை உயர்த்துவது குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
