மகளிர் உலகக் கிண்ணம்; பாகிஸ்தானின் வெற்றிக் கனவு கலைந்தது!

கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்று (15) நடைபெற்ற 2025 மகளிர் உலகக் கிண்ணத்தின் இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியானது மழையினால் எந்த முடிவும் இல்லாமல் நிறைவுக்கு வந்தது.

இதனால், இங்கிலாந்தை வீழ்த்தி முதலாவது வெற்றியை ரூஷிப்பதற்கு காத்திருந்த பாகிஸ்தான் மகளிர் அணியின் கனவு கலைந்து போனது. 

நேற்று ஆரம்பமான 2025 மகளிர் உலகக் கிண்ணத் தொடரின் 16 ஆவது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ளத் தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்கள் பாகிஸ்தானின் பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறினர்.

அமே ஜோன்ஸ் (8 ஓட்டம்), டாமி பீமோன்ட் (4 ஓட்டம்), தலைவர் நாட் சிவெர் (4 ஓட்டம்) ஆகியோர் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. 

இங்கிலாந்து அணி 25 ஓவர்களில் 7 விக்கெட்டு இழப்புக்கு 75 ஓட்டங்களை எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. 

இதனால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து ஆட்டம் 31 ஓவராக குறைக்கப்பட்டது. 

தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 31 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 133 ஓட்டங்களை சேர்த்தது. 

இங்கிலாந்துக்காக அதிகபட்சமாக சார்லி டீன் 33 ஓட்டங்களை எடுத்தார். 

பந்து வீச்சில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் பாத்திமா சனா 6 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 27 ஓட்டங்களை மட்டுமே வழங்கி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பெண்கள் உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளரின் சிறந்த பந்து வீச்சு இதுவாகும்.

பின்னர் டக்வொர்த்- லூவிஸ் விதிப்படி பாகிஸ்தான் அணி 31 ஓவர்களில் 113 ஓட்டங்களை எடுக்க வேண்டும் என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. 

நம்பிக்கையுடன் களமிறங்கிய பாகிஸ்தான் 6.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 34 ஓட்டங்களை எடுத்திருந்த போது மீண்டும் மழை பெய்தது. 

தொடர்ந்து மழை பெய்தமையினால் ஆட்டத்தை கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தனர். 

இதனால், பாகிஸ்தான் அணியின் வெற்றிக் கனவு கலைந்தது.

அத்துடன், இது பாகிஸ்தானின் அரையிறுதி நம்பிக்கைக்கு குறிப்பிடத்தக்க அடியாக அமைந்தது.

முடிவில் இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. 

நடப்பு தொடரில் மழையால் இரத்தான 3 ஆவது ஆட்டம் இதுவாகும். 

இந்த மூன்று ஆட்டங்களும் இதே மைதானத்தில் நடந்தவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Image

நன்றி

Leave a Reply