அமெரிக்க ஜனாதிபதியினால் கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டமூலத்தை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் சுமார் 7 வருடங்களின் பின்னர் மீண்டும் அமெரிக்காவின் அரச நிர்வாகம் முற்றாக முடங்கியுள்ளதுடன் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான குடியரசு கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்த நிலையில், டிரம்ப் தலைமையிலான அரசாங்கம் அண்மையில் நாடாளுமன்றத்தில் ஒரு புதிய சட்டமூலத்தை கொண்டு வந்தது. இந்த சட்டமூலத்தில் பழைய திட்டங்களை தவிர்த்து, புதிய திட்டங்களுக்கு நிதி வழங்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலத்திற்கு அமெரிக்க நாடாளுமடன்றத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் ஜனநாயக கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த சட்டமூலத்தை நிறைவேறுவதற்கு டிரம்ப் தலைமையிலான ஆளும் கட்சிக்கு ஆதரவாக ஜனநாயக கட்சியை சேர்ந்த 8 பேர் வாக்களிக்க வேண்டிய நிலை உள்ளது.
ஆனால், இதற்கு ஜனநாயக கட்சி தலைமை சில நிபந்தனைகளை விதித்துள்ளது. இதில், டிரம்பின் சுகாதார திட்டங்கள் தொடர்பான மருத்துவ காப்பீட்டு சலுகைகளை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். ஆனால், இதனை டிரம்ப் ஏற்க மறுத்ததன் காரணமாக, அவர் கொண்டு வந்த புதிய சட்டமூலம் நிறைவேறாமல் தடைபட்டுள்ளது.
சட்டமூலத்திற்கு ஆதரவாக 55 சதவீத வாக்குகளும், எதிராக 45 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. இந்த சட்டமூலம் நிறைவேற 60 சதவீத வாக்குகள் தேவை.எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்துள்ள நிலையில், அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது.
இதனால், அமெரிக்க நேரப்படி இன்று நள்ளிரவு 12.01 மணி தொடக்கம் அத்தியாவசியமற்ற அனைத்து சேவைகளும் நிறுத்தப்படும் என்றும் விமானப் போக்குவரத்து முதல் சிறு வணிக கடன் அலுவலகங்கள் வரை அனைத்தும் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி ஆதரவு அளிக்காததால் அரசு செலவீனங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக, அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்களைத் தவிர, ஏனைய அரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாய விடுப்பில் அனுப்பப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. புதிய சட்டமூலம் நிறைவேறாமல் தடைபட்டுள்ளதால் அரசு உதவி பெறும் திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதில், அமெரிக்க இராணுவம் மற்றும் தபால் சேவை உள்ளிட்ட முக்கிய சேவைகள் மட்டும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா அரசு முடங்கி இருப்பதன் காரணமாக சுமார் 7.50 இலட்சம் அரசு ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய நிதி தடைபடும் என்றும், இதனால் அமெரிக்க அரசுக்கு ஒரு நாளைக்கு 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் நிதி வழங்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேறாத நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டுக்கு பின்னர் மீண்டும் அமெரிக்க அரசு நிர்வாகம் தற்போது முடங்கியுள்ளது. குறிப்பாக ட்ரம்ப் இதற்கு முன் ஜனாதிபதியானபோதும், 2018 டிசம்பர் முதல் 2019 ஜனவரி வரை அமெரிக்க அரசு முடங்கியமை குறிப்பிடத்தக்கது.