மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் சவால்களைக் கண்டறியும் வகையில் விஜயமொன்றை அதிகாரிகள் மேற்கொண்டிருந்தனர்.
கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எம்.எல்.எம். புஹாரி முஹம்மத்தின் ஏற்பாட்டில் வாழைச்சேனையிலுள்ள கிழக்கு சமூக அபிவிருத்தி மைய அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் கனடாவின் இலங்கை மாலைதீவுகளுக்கான அரசியல் மற்றும் வர்த்தகப் பிரிவு ஆலோசகர் க்வென் ரெம்மெல் (Gwen Temmel) மற்றும் அரசியல் பிரிவு அதிகாரி சாகித்தியன் கணேசநாதன் ஆகியோரும் சமூக செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
சந்திப்பின்போது கனேடிய அதிகாரிகளிடம் மாவட்டத்தில் எதிர்கொள்ளப்படும் சகவாழ்வுக்கு சவாலான விடயங்கள் அறிக்கையாக கையளிக்கப்பட்டன. கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் புஹாரி, சமூக ஆய்வாளரும் ஊடகவியலாளருமான ஏ.எச்.ஏ.ஹுஸைன் ஆகியோர் அறிக்கைகளை கையளித்தனர்.
அந்த அறிக்கையில் மாவட்டத்தின் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் ஒட்டு மொத்த நெருக்கடி நிலைமை பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மட்டக்களப்பு மாவட்டம் 2633 சதுர கி.மீ பரப்பளவுடன் 14 பிரதேச செயலகப் பிரிவுகளைக் கொண்டுள்ளது. இங்கு நான்கு முஸ்லிம் பிரதேச செயலகப் பிரிவுகள் உள்ளன.
காத்தான்குடி (3.4 சதுர கி.மீ), ஏறாவூர் நகரம் (3.89 சதுர கி.மீ), கோறளைப்பற்று மேற்கு அல்லது ஓட்டமாவடி (6.84 சதுர கி.மீ), மற்றும் கோறளைப்பற்று மத்தி (6.50 சதுர கி.மீ) ஆகியவை அடங்கும்.
முஸ்லிம் பிரதேச செயலாளர் பிரிவுகளின் மொத்த நிலப்பரப்பளவு சுமார் 20.0 சதுர கி.மீ ஆகும். இது இன்று முஸ்லிம் மக்கள் தொகை கிட்டத்தட்ட 30 வீதமாக இருக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தின் மொத்த பரப்பளவில் 1.0சத வீதத்துக்கும் குறைவானதாகும்.
உள்ளூராட்சி ஆணைக்குழு கோறளைப்பற்று மத்திய பிரதேசத்தை முஸ்லிம்களின் வரலாற்று வாழ்விடப் பகுதியாக அறிவித்த போதிலும், 240 சதுர கி.மீ.க்கும் அதிகமான பரப்பளவில் 11 கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்டுள்ள இந்தப் பிரதேச செயலகப் பிரிவின், அதன் எல்லைகள் இன்னும் வரையறுக்கப்படவில்லை.
கிழக்கு மாகாணம் காத்தான்குடி நகரில் சில கிராம அலுவலர் பிரிவுகளில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோமீட்டருக்கு 7747 ஆகும்.
இந்தக் காரணத்தினால், தென்கிழக்கு ஆசியா முழுவதிலும் மிகவும் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதியாக காத்தான்குடிப் பிரதேசம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த நிலைமை தொடர அனுமதிக்கப்பட்டால், இன்னும் 10 ஆண்டுகளுக்குள் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் முஸ்லிம் சமூக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மேலும் மோசமடையும் என்று அஞ்சப்படுகிறது.
சுமார் 170 ஆயிரம் பேர் வசிக்கும் முஸ்லிம் பிரிவுகளில் மக்கள் தொகை அடர்த்தி அதிகமாக இருப்பதால், அவர்கள் சுகாதாரம், குடியிருக்க வாழ்விடம் இல்லாத நிலைமை போன்றவற்றில் சொல்லொணா சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
அண்டை பகுதிகளில் உள்ள தமிழ் மக்கள் அனுபவிக்கும் கஷ்டங்களை விட இங்குள்ள முஸ்லிம்கள் அனுபவிக்கும் கஷ்டங்கள் மிக அதிகம்.
இந்தப் பிரச்சினைகள் மற்ற அண்டை பகுதிகளிலும் பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தும்.
முஸ்லிம் பிரதேசங்களில் அசாதாரண மக்கள் தொகை அடர்த்தி காரணமாக, முஸ்லிம் மக்கள் பல்வேறு முக்கியமான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அவற்றில் சில,
01. சுத்தமான குடிநீர் கிடைக்காத பிரச்சினை
02. சுகாதாரமும் ஆரோக்கியமும் இன்மை
03. சுற்றுச்சூழல் மாசுபாடு
04. குடியிருப்பு நிலம் கிடைக்காமை.
சுத்தமான குடிநீரின் கிடைக்கப் பெறுவதிலுள்ள பிரச்சினை
நிலத்தடி நீர் ஏற்கெனவே மாசுபட்டுள்ளது. இதனால் ஏற்படும் குடிநீர் பிரச்சினை பல விளைவுகளை ஏற்படுத்துகின்றது.
மக்கள் தொகை அடர்த்தி காரணமாக பல்வேறு வகையான தொற்றுநோய்கள் எளிதில் பரவுவதற்கான வலுவான சாத்தியக்கூறுகள் உள்ளன.
டெங்குநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், கொலரா, டைபாய்டு போன்ற நீர் மூலம் பரவும் நோய்களால் மக்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
சூழல் மாசுபாடு நிலப்பரப்புகளை சேறும் சகதியுமாக மாற்றலாம், விஷமாகவும், நீர்வழிகளாகவும் மாறலாம் அல்லது தாவரங்கள் மற்றும் விலங்குகளும் அழிவைச் சந்திக்கலாம்.
மனிதர்களும் தொடர்ந்து மாசுபாட்டால் பாதிக்கப்படுகின்றனர்.
உதாரணமாக, மற்ற பிரதேச செயலக நிர்வாகப் பிரிவுகளுடன் ஒப்பிடும்போது, முஸ்லிம் பிரதேச செயலாளர் பிரிவுகளில் நாள்பட்ட சுவாச நோய், நுரையீரல் புற்றுநோய் மற்றும் பிற நோய்களுக்கு வழிவகுக்கும் சூழல் நிலவுகிறது.
காணி வழங்கப்படாமை
10 பேர்ச்சஸ் பகுதிக்குள் 3 முதல் 4 குடும்பங்கள் வசிக்கிறார்கள்.
அரச நிலம் இல்லை. மற்ற பிரதேச செயலாளர் பிரிவுகளுடன் ஒப்பிடும்போது, குடிநீரில் நிறைய பிரச்சினைகள் உள்ளன. குடியேற்றத்திற்கான நிலம் கிடைக்காதது. எதிர்காலத்தில் நிலம் கிடைக்காததால், குடும்பங்கள் விரிவடையும்போது, விரைவில் தீர்வு வழங்கப்படாவிட்டால் மக்கள் வாழ முடியாழ்நிலை நிலவுகிறது.
மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களில் காணிக்கு கொழும்பு நகரில் நிலவும் விலை நிர்ணயங்களை விட விலை உயர்ந்துள்ளது. மக்கள் அதிக விலைக்கு நிலம் வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இந்த நெருக்கடியை சமாளிக்க இந்தப் பிரிவுகளில், மக்களுக்கு இடையில் குறுகிய இடைவெளிகளுடன் வீடுகளைக் கட்டுவதைத் தவிர வேறு தீர்வு இல்லை.
1985ஆம் ஆண்டு இனக் கலவரங்களுக்குப் பிறகு, தமிழீழ விடுதலைப் புலிகள் 35,000 ஏக்கருக்கும் அதிகமான முஸ்லிம் குடியிருப்பு, விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு நிலங்களை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்தனர்.
உரிமைப் பத்திரங்கள், அரசாங்க அனுமதிகள் அல்லது நெல் செய்கை பதிவேட்டின் அடிப்படையில் முஸ்லிம்கள் தங்கள் சொத்துக்களை மீண்டும் பெறுவதற்கு அரசாங்கம் எதுவும் செய்யவில்லை.
1983, 1985 மற்றும் 1990ஆம் ஆண்டுகளில் நடந்த இன மோதலின்போது 12,700க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் எல்ரீரீஈ அமைப்பின் ஆயுததாரிகளால் விரட்டியடிக்கப்பட்டன.
எல்ரீரீஈ ஆயுதக் குழுவின் கீழ் வந்த அனைத்து முஸ்லிம் நிலங்களையும் எல்ரீரீஈ ஆதரவுத் தமிழர்கள் வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்தனர். இங்கும் அரசாங்கம் இந்த இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் வாழ்வாதார இழப்புக்கு எந்த நிவாரணமும் வழங்கவோ அல்லது இழப்பீடு வழங்கவோ எதுவும் செய்யவில்லை.
இந்த கடுமையான நிலப் பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்க்கும் வகையில் பொருத்தமான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். எனவே, அரசாங்கம் பிரச்சினைத் தீர்வை பரிசீலனை செய்ய வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களில் பத்தாயிரம் முஸ்லிம் குடும்பங்கள் வாழ்வதற்கு ஒரு துண்டு நிலம் கூட இல்லாமல் நிர்க்கதி நிலையில் அலைக்கழிந்து வருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பை இன விகிதாசார அடிப்படையில் பகிர்ந்தளித்தால் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களுக்கு குறைந்தபட்சம் 800 சதுர கிலோமீட்டர் நிலம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் இப்பொழுது மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் வாழும் சுமார் ஒரு இலட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வெறும் 20 சதுர கிலோமீற்றர் பரப்பளவுக்குள்ளேயே முடக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
– Vidivelli –