‘ரஷ்யா யுத்தம் செய்ய இந்தியா நிதியுதவி’ – 50% வரி விதிப்பு குறித்து ட்ரம்ப்பின் ஆலோசகர் கருத்து | India funding Russia for Ukraine war trump Peter Navarro alleges amdi tax tariff

வாஷிங்டன்: தொடர்ச்சியாக தள்ளுபடி விலையில் ரஷ்யாவில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதுதான் உக்ரைன் மீதான உக்கிர தாக்குதலுக்கு காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ கூறியுள்ளார்.

இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 25 சதவீத கூடுதல் வரி விதிப்பு புதன்கிழமை (ஆக.27) அமலுக்கு வந்தது. ஏற்கெனவே விதித்த 25 சதவீத வரியோடு இந்த கூடுதல் 25 சதவீதமும் சேர்ந்துள்ள நிலையில், 50 சதவீத வரி விதிப்பு இந்தியாவின் ஏற்றுமதியை கடுமையாக பாதிக்கும். இதனால், தொழிலாளர் சார்ந்த துறைகள் ஏற்றுமதி 70 சதவீதம் அளவுக்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில் பிரபல வணிக ஊடக நிறுவனத்துடனான நேர்காணலில் பீட்டர் நவரோ பங்கேற்றார். அதில் அவர் குறிப்பிட்டு பேசிய முக்கிய அம்சங்கள் குறித்து பார்ப்போம். “மேற்கத்திய நாடுகளின் கடுமையான அழுத்தத்தையும் மீறி ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை தொடர்ந்து வாங்கி வரும் இந்தியாவை தண்டிக்கும் நோக்கில் இந்த 50 சதவீத வரி விதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியா அதை நிறுத்தினால் நிச்சயம் கூடுதல் வரி விதிப்பு குறைக்கப்பட்டு வெறும் 25 சதவீதம் மட்டுமே வரி விதிக்கப்படும்.

இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகின்ற காரணத்தால் உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரில் ரஷ்ய தரப்புக்கு மறைமுக உதவி கிடைக்கிறது. அந்த நிதி ஆதாரத்தை கொண்டுதான் ரஷ்யா தனது ஆக்கிரமிப்பை தொடர்கிறது. இதன் மூலம் ரஷ்ய யுத்தம் செய்ய இந்தியா உதவுகிறது. இந்தியாவின் இந்த செயல் அமெரிக்கர்களுக்கு இழப்பு ஏற்படுகிறது.

அது எப்படி என்றால் இந்தியா தள்ளுபடி விலையில் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குகிறது. அதன் மூலம் ரஷ்யா நிதி ஆதாயம் அடைகிறது. அந்த நிதியை கொண்டு படை பலத்தை ரஷ்யா உறுதி செய்கிறது. அதோடு உக்ரைன் மீது தாக்குதல் நடத்துகிறது. உக்ரைனுக்கு தேவையான ராணுவ உதவிகளை அமெரிக்கா வழங்குகிறது. அதற்கான நிதி ஆதாரம் அமெரிக்க மக்கள் செலுத்தும் வரிதான். அதனால் தான் இந்தியாவின் இந்த செயல் அமெரிக்கர்களுக்கு இழப்பை ஏற்படுத்துகிறது என்கிறேன்.

நாங்கள் யாரிடமிருந்து வேண்டுமானாலும் எண்ணெய் வாங்குவோம். அது எங்கள் உரிமை என சொல்கிறது இந்தியா. அதே நேரத்தில் அதிக வரிகள் கூடாது என சொல்கிறது. அதுதான் என்னை இம்சிக்கிறது” என கூறியுள்ளார்.

நன்றி

Leave a Reply