வடக்கு பாடசாலை மாணவர்களுக்கு பைபிள் அன்பளிப்பு – வலுக்கும் எதிர்ப்பு

வடமாகாண பாடசாலைகளில் கிறிஸ்தவ சபை ஒன்றின் பைபிளை நிறுவனம் ஒன்று மாணவர்களுக்கு அன்பளிப்பு செய்வதற்கு வட மாகாண மேலதிக மாகாண கல்வி பணிப்பாளர் அனுமதி வழங்கிய சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

வடமாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் தமது கிறிஸ்தவ சபையின் பைபிள் நூலினை வழங்குவதற்கு நிறுவனம் ஒன்று வட மாகாண மேலதிக மாகாண கல்வி பணிப்பாளரிடம் அனுமதி கோரிய நிலையில் , பாடசாலைகளில் மாணவர்களுக்கு நூலினை அன்பளிப்பு செய்வதற்கு அனுமதி வழங்கி இருந்தார்.

குறித்த அனுமதி கடிதம் சமூக ஊடகங்களில் வெளியான நிலையில், அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பாடசாலை மாணவர்கள் மத்தியில் பாடசாலைக்குள் மத மாற்றம் செய்யும் நோக்குடன் கிறிஸ்தவ சபை ஒன்றின் பைபிள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது குறித்த கிறிஸ்தவ சபையை சேர்ந்த மாணவர்களுக்கு மாத்திரம் வழங்குமாறு கடிதம் மூலம் பைபிளை வழங்க முற்பட்டவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவுறுத்தல் பாடசாலை மட்டங்களில் எவ்வாறு பின் பற்றப்படும் , கிறிஸ்தவ சபையை சேர்ந்தவர்களுக்கு எனில் , அதனை அவர்களின் சபைகள் ஊடாகவே வழங்க நடவடிக்கை எடுக்காது எதற்காக பாடசாலைகளில் வைத்து வழங்க வேண்டும்?

பாடசாலைகள் ஊடாக வழங்கப்பட காரணம் மாணவர்களை மதமாற்றம் செய்யும் நோக்கு என்பதனை வலுவாக சந்தேகிக்க கூடிய ஏது நிலைகள் காணப்படுவதனால் பாடசாலைகளில் பைபிளை வழங்குவதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என கோரி வருகின்றனர்.

இந்நிலையில் வடமாகாண பாடசாலை மாணவர்கள் மத்தியில் கிறிஸ்தவ சபையின் பைபிள் வழங்கப்படுவதனை வடமாகாண ஆளுநர் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

அத்தனையும் மீறி பைபிள் மாணவர்கள் மத்தியில் வழங்கப்பட்டால், அவ்வாறு வழங்கப்படும் பைபிளை தீயிட்டு கொளுத்துவோம் என சிவசேனை அமைப்பினை சேர்ந்த சிறிந்தீரன் மற்றும் மாதவன் ஆகியோர் யாழில். நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இவ்வாறான நிலையில் தற்போது யாழ் , நகர் பகுதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பைபிள் வழங்கப்படுவதற்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

Post Views: 0

நன்றி

Leave a Reply