வெளிமாநிலங்களில் பொள்ளாச்சி இளநீருக்கு வரவேற்பு – தினமும் 4 லட்சம் காய்கள் அனுப்பிவைப்பு | pollachi tender coconut is well received in foreign states

பொள்ளாச்சி: பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில் முக்கிய சாகுபடி பயிராக தென்னை உள்ளது. தேங்காய் மற்றும் இளநீர் ரகங்கள் பயிரிடப்படுகின்றன. இங்கு விளையும் இளநீர் தண்ணீர் அதிகமாவும், சுவையாகவும் இருப்பதால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பொள்ளாச்சி இளநீருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இங்கிருந்து தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும் இளநீர் அனுப்பி வைக்கப்படுகிறது.

மே மாதம் பெய்த கோடை மழை, பின்னர் பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக இளநீர் விற்பனை குறைந்தது. ஆனால் மழையின் காரணமாக இளநீர் உற்பத்தி அதிகரித்தது. தற்போது மழை குறைந்துள்ள நிலையில் இளநீர் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வெளியூர்களுக்கு இளநீர் அனுப்புவது அதிகரித்துள்ளது.

இது குறித்து ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது: பொள்ளாச்சி, ஆனைமலை, கோட்டூர் பகுதிகளில் இருந்து, தமிழகம் மட்டுமல்லாது, ஆந்திரா, மகாராஷ்ட்ரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் இளநீர் அனுப்பி வைக்கப்படுகிறது. நல்ல தரமான ஒட்டுரக இளநீரின் விலை ரூ.45 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு டன் இளநீர் ரூ.18,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பிற பகுதிகளில் இளநீரின் தேவை அதிகரித்துள்ளது. இளநீரின் மருத்துவ குணங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு, நுகர்வு அதிகரித்துள்ளதால், விற்பனை உயர்ந்துள்ளது. மேலும், இளநீரை பதப்படுத்தி பாட்டிலில் அடைத்து ஏற்றுமதி செய்யும் பெரிய நிறுவனங்களும் இளநீரை போட்டி போட்டு அதிக அளவில் கொள்முதல் செய்கின்றன.

பெங்களூரு, மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் நேரடியாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அந்த நிறுவனங்களுக்கு தினமும் ஒரு லட்சம் இளநீர் வரை தேவைப்படுகிறது. அத்துடன் வட மாநிலங் களில் இருந்து புதிதாக இளநீர் நிறுவனங்களும் வியாபாரிகளும் பொள் ளாச்சி, ஆனைமலை பகுதிகளுக்கு வந்து இளநீரை கொள்முதல் செய்கின்றனர். குறிப்பாக, பச்சை இளநீருக்கு வியாபாரிகளிடம் நல்ல கிராக்கி உள்ளது.

பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில் இருந்து தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு ஒரு நாளைக்கு 4 லட்சம் இளநீர் காய்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இளநீரை எடைக்கு விற்பனை செய்யும் விவசாயிகள் 37 நாட்களுக்கு பின்னர் இளநீரை அறுவடை செய்ய வேண்டும். இதனால் எடை குறைந்து இழப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.அறுவடை செய்து குவித்து வைக்கப்பட்டுள்ள இளநீர். (கோப்பு படம்)

நன்றி

Leave a Reply