ஹொங் கொங்கில் 2 ஆம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட குண்டு, கண்டுபிடிப்பு!

சீனாவின் சிறப்பு அந்தஸ்து மாகாணமான ஹொங் கொங்கில் இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட மிகப்பெரிய குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குவாரி பே (Quarry Bay) பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு, கட்டுமானப் பணிகளுக்காக தோண்டிக் கொண்டிருந்தபோது இக் குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. தகவலறிந்து பொலிஸார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.ஆய்வில், குண்டின் நீளம் 1.5 மீட்டர், எடை 450 கிலோ என கண்டறியப்பட்டது.

இது குறித்து மூத்த பொலிஸ்  அதிகாரி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில் ” 
“இது இரண்டாம் உலகப் போர் காலத்து குண்டு என்பதை உறுதி செய்துள்ளோம். இதை செயலிழக்கச் செய்யும் பணி மிகவும் ஆபத்தானது என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1,900 வீடுகளில் வசிக்கும் சுமார் 6,000 பேரை வெளியேற்றினோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

வெடிகுண்டு செயலிழப்புப் படையினர்கள் பல மணி நேர போராட்டத்திற்கு பின் குண்டை வெற்றிகரமாக செயலிழக்கச் செய்தனர், இதனால் அண்டை மக்கள் அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானிய ஆக்கிரமிப்பில் இருந்த ஹொங் கொங் மீது நேச நாடுகள் கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்தின. அந்தத் தாக்குதல்களில் வெடிக்காமல் பூமியில் புதைந்துபோன குண்டுகள், இன்றும் கட்டுமானப் பணிகளின் போது அடிக்கடி கண்டுபிடிக்கப்படுகிறது. 2018 ஆம் ஆண்டிலும், வான் சாய் பகுதியில் இதேபோன்ற குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply