*சர்வதேச போர்க்குற்ற விசாரணை என்று கூறப்படும் நிலையில், அநுரவுடன் கைகோர்க்கும் ஐநா…
*தமிழ்த் தரப்பில் ஒருமித்த குரல் செயற்பாடுகள் அற்ற தன்மையை சாதகமாக பயன்படுத்தும் சர்வதேசம்…
*கனடா அரசின் இராணுவ நிபுணர் கொழும்பில் பயிற்சி வழங்கியுள்ளார்.
அ.நிக்ஸன்-
— — —
ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கைத்தீவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் பற்றிய சர்வதேச விசாரணை என்று தொடர்ச்சியாகப் பேசப்பட்டு வரும் பின்னணில், ‘இலங்கை அரசு’ என்ற கட்டமைப்பை காப்பாற்றும் முயற்சியிலேயே மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் தீவிரமாக ஈடுபடுகின்றன.
அத்துடன், 1920 இல் ஆரம்பித்த சிங்கள – தமிழ் முரண்பாடுகள், முப்பது வருட அஹிம்சைப் போராட்டத்தின் மூலமும், முப்பது வருட ஆயுதப் போராட்டத்தின் ஊடாகவும் தீர்க்க முடியாமல் போன சந்தர்ப்பங்களில், 2009 இற்குப் பின்னரான கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக தமிழ் இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணை அவசியம் என தமிழர்கள் கோருகின்றனர்.
இப் பின்புலத்தில், மேற்கு – ஐரோப்பிய நாடுகள் இலங்கையின் பக்கம் நிற்பதை அவதானிக்க முடிகிறது. இந்தியாவும் அதற்கு விதிவிலக்கு அல்ல.
ரசிய – உக்ரெய்ன் போர், இஸ்ரேல் – காசா போர் மற்றும் அமெரிக்காவின் பொருளாதார வரிகள் உள்ளிட்ட பல விவகாரங்களுக்கு மத்தியில் உலக அரசியல் சமநிலை தற்போது குழப்பமடைந்துள்ளது.
இதன் காரண – காரயமாக சிறிய நாடு ஒன்றைக் கூட தங்கள் வசம் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தியை மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் வகுத்துள்ளன. டொனால்ட் ட்ரம்ப்பும் அந்த நிலைப்பாட்டில் தான் இயங்குகிறார்.

இங்கே, வல்லரசுகளின் இப் போட்டித் தன்மைகளை சிங்கள அரசியல் தலைவர்கள் நன்கு புரிந்து கையாளுகின்றனர்.
பாலஸ்தீனம் தனிநாடு அதாவது இரு அரசுத் தீர்வு முறைக்கு எப்போதோ அங்கீகாரம் பெற்றுவிட்டது. ஆனாலும், அமெரிக்க அழுத்தங்கள் மற்றும் சர்வதேச புவிசார் அரசியல் நலன்கள் அடிப்படையில் பாலஸ்தீன விவகாரம் முடிவின்றி நீடிக்கிறது என்பதே உண்மை.
அதேநேரம் பாலஸ்தீன விவகாரத்துக்கு இரு அரசுத் தீர்வு என ஏற்கனவே கூறிய சர்வதேச நாடுகள் கூட மனதளவில் அதனை முழுமையாக விரும்பவில்லை என்பது மற்றொரு உண்மை.
இந்த ஊடாட்டங்களுக்கு மத்தியில் சர்வதேச அரசியல் நலன்கள் என்ற தன்மையை ஆழமாக அறிந்து குறிப்பாக சமகால புவிசார் அரசியல் – பொருளாதார போட்டிச் சூழலுக்கு ஏற்ப, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்று ஐநாவில் கூறியிருக்கிறார்.
மகிந்த ராஜபக்சவும் அவ்வாறு கூறியிருக்கின்றார். 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி என கூறப்பட்ட மைத்திரி – ரணில் ஆட்சியிலும் பாலஸ்தீனம் பற்றி அவ்வாறு கூறப்பட்டிருக்கிறது.
ஆனால், அது இலங்கை அரசின் பாலஸ்தீனம் பற்றிய உண்மையான அரசியல் பார்வையல்ல.
இருந்தாலும், பாலஸ்தீனம் தனி நாடு ஆக வேண்டும் என கூறுவது ‘இலங்கை அரசு’ என்ற கட்டமைப்பின் ஒரு உத்தி. அதாவது, ஈழத் தமிழர் விவகாரத்தில் அமெரிக்க – இந்திய அரசுகளை தொடர்ந்து தம் பக்கம் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கில் கையாளப்படும் அரசியல் அணுகுமுறை அது.
குறிப்பாக, அமரிக்கா போன்ற மேற்கு நாடுகளும் அயல் நாடான இந்தியாவும் இஸ்ரேல் ஆதரவு நிலையில் செயற்படும் பின்னணியில், சிறிய நாடான இலங்கைத்தீவின் ஜனாதிபதி ஒருவர் ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில் பாலஸ்தீனம் தனி நாடாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என பேசியிருப்பது அரசியல் ரீதியான தேவைகளின் அடிப்படை என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
உலக அரசியல் ஒழுங்குகள் குழப்பமடைந்து வரும் ஒவ்வொரு சூழலிலும் இலங்கை ஜனாதிபதிகள் அவ்வாறான இராஜதந்திர பேச்சை முன்னெடுப்பது வழமை. இதற்கு அநுரகுமார திஸாநாயக்கவும் விதிவிலக்கல்ல.

அதற்கான பிரதான காரண – காரியம் என்பது, ஜெனீவா மனித உரிமைச் சபையில் இருந்து ஈழத்தமிழர் விவகாரத்தை முற்றாக நீக்கம் செய்து உள்ளக விசாரணை பொறிமுறையாக மாற்ற வேண்டும் என்ற நோக்கமாகும். அதற்கு மேற்கு – ஐரோப்பிய நாடுகளின் ஒத்துழைப்பு அவசியம். அதுவும் இந்தியா மிகவும் தேவையான ஒரு நாடு.
ஆகவே, சர்வதேச அளவில் அந்த நாடுகள் தற்போது கொண்டுள்ள பாலஸ்தீனம் தொடர்பான தற்போதைய அரசியல் கொள்கைக்கு மாறான கருத்து ஒன்றை உலக அரங்கில் பகிரங்கப்படுத்தினால், உடனடியாக அந்த நாடுகள் இலங்கையை நோக்கி அவதானம் செலுத்தும் என்ற நம்பிக்கை சிங்கள அரசியல் தலைவர்களிடம் உண்டு.
இந்த அவதானம் என்பது, இலங்கை ஒற்றை ஆட்சி அரச கட்டமைப்பை தொடர்ந்து பாதுகாக்க வேண்டும் என விரும்பும் சிங்கள அரசியல் தலைவர்களின் நோக்கங்களை நிறைவேற்ற மேற்கு – ஐரோப்பிய நாடுகள் இந்தியா ஊடாக காய் நகர்த்த முற்படும் சந்தர்ப்பத்தை உருவாக்கும்.
கடந்த காலங்களிலும் சிங்கள அரசியல் தலைவர்கள் இவ்வாறான அரசியல் காய் நகர்த்தல்களை கன கச்சிதமாகச் செய்திருக்கின்றனர்.
இதனை மேலும் அழுத்தம் திருத்தமாகச் சொல்வதானால், 1994 ஆம் ஆண்டு சந்திரிகா பெரும் வெற்றிக் கோசத்துடன் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட காலம் முதல், இன்றைய அநுரகுமார திஸாநாயக்க வரையும் நீட்சியடையும் பிரதான அரசியல் உத்தி இது.
ஏனெனில், தமிழ் இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணை என்பதில் இந்திய மத்திய அரசுக்கு உடன்பாடு இல்லை. சீனாவை மையப்படுத்திய இந்தோ – பசுபிக் விவகாரத்தில், அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இந்தியாவுடன் பனிப் போர் நிலவினாலும், ஈழத்தமிழர் விவகாரத்தில் அந்த நாடுகள் இந்தியாவை கடந்து எந்த ஒரு முயற்சியிலும் ஈடுபடாது என்பதற்கு கடந்த கால செயற்பாடுகள் உதாரணமாகும்.
இவற்றையெல்லாம் அறிந்தே சிங்கள அரசியல் தலைவர்கள் செயற்படுகின்றனர். கட்சி அரிசியல் வேறுபாடுகள் இருந்தாலும் மகிந்த சமரசிங்க, அமரர் மங்கள சமரவீர, ரணில் விக்கிரமசிங்க, பேராசிரியர் பீரிஸ், மிலிந்த மொறகொட போன்றவர்கள் சிங்கள அரசியல்வாதிகள் என்பதற்கும் அப்பால், ஈழத்தமிழர் விவகாரத்தை சர்வதேச அரங்கில் மிக நுட்பமாக கையாளும் சிறந்த இராஜதந்திரிகளாவர்.
இந்தியாவைக் கையாள மிலிந்த மொறகொட வகுத்துள்ள அரசியல் உத்திகளையே அநுரகுமார திஸாநாயக்க தற்போது நன்கு பயன்படுத்துகிறார் என்பது வெளிப்படை.

இதனை மையமாகக் கொண்டே அநுரகுமார திஸாநாயக்கா பாலஸ்தீனம் தனி நாடாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை துணிந்து ஐநாவில் கூறியிருக்கிறார். இது மேற்கு – ஐரோப்பிய நாடுகளுக்குப் புரியாத புதிர் அல்ல.
ஆனாலும், இந்தோ – பசுபிக் விவகாரத்தில் இலங்கைத்தீவு முக்கிய ஒரு தளமாக இருப்பதை கருத்தில் கொண்டு சிங்கள அரசியல் தலைவர்கள் விரும்புகின்ற இலங்கை ஒற்றையாட்சி கட்டமைப்பை நியாயப்படுத்தும் அரசியல் செயன்முறைகளுக்கு ஆதரவு வழங்கக் கூடிய ஏற்பாடுகளை செய்வார்கள் என்பதே உண்மை.
உதாரணமாக, வடக்கு கிழக்கில் இருந்தும் புலம்பெயர் நாடுகளில் இருந்தும் இன அழிப்புக்கான சர்வதேச நீதி கோரி ஜெனீவா மனித உரிமைச் சபையின் ஆணையாளருக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் சிவில் இராணுவ ஒருங்கிணைப்பு பாடநெறிக்கு இலங்கை இராணுவம் தெரிவு செய்யப்பட்டிருக்கிறது.
கொழும்பில் உள்ள அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தில் இந்த மாதம் 8 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை நடத்தப்பட்ட பாடநெறியின் நிறைவு விழா இந்த மாதம் 19 இடம்பெற்றிருக்கிறது.
இன அழிப்பு அல்லது போர்க்குற்றம் சுமத்தப்பட்டுள்ள நாடுகளின் இராணுவத்தினர் ஐநாவின் இப்படியான பாடநெறிகளுக்குத் தெரிவு செய்யப்படுவதில்லை. ஆனால், இலங்கை இராணுவம் 2009 இற்குப் பின்னரான சூழலில் பல சந்தர்ப்பங்களில் இப் பாட நெறிகள் மற்றும் சர்வதேச கூட்டு பயிற்சிகளுக்குத் தெரிவு செய்யப்பட்டு வருகின்றன.
இருந்தாலும், சர்வதேச மன்னிப்புச் சபை போன்ற சர்வதேச நிறுவனங்கள் இலங்கை இராணுவம் தொடர்பாக பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கின்றன. ஜெனீவா தீர்மானத்தின் பிரகாரம் இலங்கை இராணுவ உயர் அதிகாரிகளுக்கு பயணத் தடைக் கூட விதிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கா போன்ற மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் கூட பயணத் தடை விதித்திருக்கின்றன.
ஆகவே, மிலிந்த மொறகொட, பேராசிரியர் ரொஹான் குணவர்த்த போன்றவர்கள் சர்வதேச அளவில் இலங்கை இராணுவம் தொடர்பாக மேற்கொள்ளும் தொடர் பிரச்சாரங்களில் ஐநா நம்பிக்கை கொண்டுள்ளது என்பதையே இது வெளிப்படுத்துகிறது.
குறிப்பாக, தமிழர்கள் இன அழிப்புக்கு உள்ளாகின்றனர் என பிரகடனப்படுத்தியுள்ள கனடா அரசின் டிரேசி மார்டினோ என்ற இராணுவ நிபுணர் பயிற்சிக் குழுவுக்கு தலைமை தாங்கியமை அதனை கோடிட்டுக் காண்பிக்கிறது.
இப் பாடநெறியில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 20 அதிகாரிகள், இலங்கை கடற்படையைச் சேர்ந்த 02 அதிகாரிகள், இலங்கை விமானப்படையைச் சேர்ந்த 02 அதிகாரிகள், பங்களாதேஷ், ஃபிஜீ, இந்தோனேசியா, மொங்கோலியா, நேபாளம் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 09 வெளிநாட்டு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அர்ஜென்டீனாவைச் சேர்ந்த திரு. விக்டர் மானுவல் நுனேஸ் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பிரிகேடியர் ஜெனரல் நரேஷ் சுப்பா ஆகியோர் பிற பாட நிபுணர்களாகப் பணியாற்றினர்.
ஆகவே, அநுர அரசாங்கத்தை முன்னேற்றி, இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் தமது புவிசார் அரசியல் – பொருளாதார நோக்கங்களை நிறைவேற்றுவதே மேற்கு – ஐரொப்பிய நாடுகளின் நோக்கமாக உள்ளன.
ஐநா இலங்கையின் நலன்களுக்கு ஏற்ப ஒத்துழைப்பு வழங்கும் என, ஐநாவின் இலங்கைக்கான இணைப்பாளர் மார்க் அண்ட்ரூ பிரான்ஸ், அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவான சில நாட்களில் சந்தித்தபோது கூறியதை தமிழர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
அத்துடன், அரசுக்கு அரசு என்ற அணுகுமுறையை ஐநா எப்போதும் கையாளும். ஒரு நாட்டில் பாதிக்கப்பட்ட – ஒடுக்கப்பட்ட இனமாக ஒருமித்த குரலில் தமது அரசியல் உரிமை பற்றிய செயற்பாடுகளை உரிய முறையில் செயற்படுத்த தவறினால், ஐநா போன்ற சர்வதேச அமைப்புகள் அந்த இனத்தை ஒடுக்கும் அரசுகளுடன் கைகோரக்கும் ஆபத்து உருவாகும்.
ஆகவே 2009 இற்குப் பின்னரான தமிழர்களின் செயற்பாடுகளில் ஒருமித்த செயற்பாடுகள் அற்ற தன்மை மேலோங்கி வருவதால், ஐநா போன்ற அமைப்புகளும் சர்வதேச நாடுகளும், இலங்கைத்தீவின் ஒட்டுமொத்த மக்கள் என்ற அடிப்படையில் “இலங்கை அரசு” என்ற கட்டமைப்புடன் மாத்திரம் உறவை பேணி அபிவிருத்தி அரசியலை புகுத்துகின்றன.
இதனை அநுரகுமார அல்ல, வேறு எந்த ஒரு சிங்கள தலைவரும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்துவார் என்பதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.