அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்த ஸ்பெயின் – “சர்வதேச சட்டமே முக்கியம்” என அதிரடி அறிவிப்பு!

ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகளின் இராணுவத் தாக்குதல்களுக்குத் தனது வான்பரப்பையோ அல்லது இராணுவத் தளங்களையோ பயன்படுத்த ஸ்பெயின் அரசு  அனுமதி மறுத்துள்ளது.  ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் (Pedro Sánchez) தலைமையிலான அரசு, அமெரிக்கா தனது இராணுவ நடவடிக்கைகளுக்காக ஸ்பெயினில் உள்ள தளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதித்துள்ளது.

ஸ்பெயினின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள ரோட்டா (Rota) மற்றும் மோரோன் டி லா ஃபிரான்டெரா (Morón de la Frontera) ஆகிய முக்கிய இராணுவத் தளங்களை ஈரான் மீதான தாக்குதல்களுக்குப் பயன்படுத்தவே இவ்வாறு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  ஸ்பெயினின் இந்தத் தடையைத் தொடர்ந்து, அங்கு நிலைநிறுத்தப்பட்டிருந்த அமெரிக்காவின் 15 போர் விமானங்கள் (முக்கியமாக எரிபொருள் நிரப்பும் KC-135 ரக விமானங்கள்) ஸ்பெயினை விட்டு வெளியேறி ஜெர்மனியில் உள்ள ராம்ஸ்டைன் (Ramstein) தளத்திற்குச் சென்றுள்ளன.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இந்தத் தாக்குதல்கள் “சர்வதேச சட்டங்களுக்குப் புறம்பானவை” என்றும், ஐநா சாசனத்திற்கு (UN Charter) முரணான எதற்கும் தங்கள் நாட்டைப் பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்றும் ஸ்பெயின் வெளியுறவு அமைச்சர் ஜோஸ் மானுவல் அல்பாரஸ் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு ஓரளவு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், ஸ்பெயின் இந்தத் தாக்குதல்களைக் கடுமையாகக் கண்டித்துத் தனித்து நிற்கிறது. “உலகம் மற்றுமொரு அழிவுகரமான போரைத் தாங்காது” எனப் பிரதமர் சான்செஸ் எச்சரித்துள்ளார்.

ஸ்பெயினைப் போலவே, நேட்டோ (NATO) அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் துருக்கியும் அமெரிக்காவிற்குத் தனது வான்பரப்பைப் பயன்படுத்த அனுமதி மறுத்துள்ள அதேவேளை சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மற்றும் ஓமான் ஆகிய நாடுகள் அமெரிக்காவின் “தாக்குதல்” நடவடிக்கைகளுக்குத் தங்கள் தளங்களைப் பயன்படுத்த கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SpainNoToWar #PedroSanchez #RotaBase #USMilitaryExit #InternationalLaw #IranConflict2026

நன்றி

Leave a Reply