அமெரிக்கா கனவு கனவாவே போச்சு! “இந்த” 75 நாடுகளை சேர்ந்தவர்கள் அங்க போக முடியாது – Sri Lanka Tamil News


அமெரிக்காவில் குடியேற நினைத்திருந்த பல நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு பெரும் பின்னடைவாக, அமெரிக்க அதிபர் Donald Trump புதிய குடியேற்ற உத்தரவை வெளியிட்டுள்ளார். இந்த உத்தரவின்படி, தெற்காசியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மொத்தம் 75 நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு வரும் மக்களுக்கான குடியேற்ற விசா வழங்கும் நடைமுறை நிறுத்தப்பட உள்ளது.

பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர், சூடான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேறுவது, அந்த நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்ற காரணத்தை முன்வைத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், இந்த 75 நாடுகளிலிருந்து வரும் மக்களுக்கு இனி குடியேற்ற விசா வழங்கப்படாது என்றும், இந்த புதிய நடைமுறை வரும் ஜனவரி 21 முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவால் லத்தீன் அமெரிக்கா, கரீபியன் தீவுகள், ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியாவைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்கள் நேரடியாக பாதிக்கப்பட உள்ளனர். கல்வி, வேலை, குடும்ப இணைப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக அமெரிக்காவில் குடியேற திட்டமிட்டிருந்தவர்களுக்கு இந்த முடிவு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது. அதே நேரத்தில், இந்த 75 நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதனால், அமெரிக்காவில் குடியேற விரும்பும் இந்தியர்களுக்கு இந்த உத்தரவால் நேரடி பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அண்டை நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்த உத்தரவு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் இந்த முடிவு, உலகளவில் குடியேற்ற கொள்கைகள் குறித்த விவாதத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. மனித உரிமை அமைப்புகளும் பல்வேறு நாடுகளும் இந்த உத்தரவை கவனத்துடன் அணுகி வருகின்றன.

டொனால்ட் டிரம்ப் அதிபராக பொறுப்பேற்றதிலிருந்து, குடியேற்ற கொள்கைகளில் கடுமையான நிலைப்பாட்டை தொடர்ந்து வருகிறார். அமெரிக்கர்களின் வேலை வாய்ப்புகளை வெளிநாட்டினர் பறித்துக்கொள்கிறார்கள் என குற்றம் சாட்டிய அவர், சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினார். இது உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மேலும், ஐடி துறை உள்ளிட்ட துறைகளில் பணியாற்றுவதற்காக வழங்கப்பட்டு வந்த H-1B விசா நடைமுறைகளிலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. விசா கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டதை எதிர்த்து, ஐடி நிறுவனங்களும் மத அமைப்புகளும் நீதிமன்றத்தை நாடியதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய பின்னணியில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய குடியேற்ற விசா தடை, அமெரிக்கா செல்லும் கனவை பலருக்குப் பூர்த்தியாகாத ஒன்றாக மாற்றியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

நன்றி

Leave a Reply