அமெரிக்க வரிவிதிப்பால் ஏற்றுமதி குறையும் அபாயம் – திருப்பூர் தொழில் துறையினர் கூறுவது என்ன? | Risk of Decline on Exports Due to US Tariffs – Tiruppur Industry Members Say?

இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு, ஆக.1-ம் தேதி (இன்று) முதல் 25 சதவீத வரிவிதிப்பை அமல்படுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று முன்தினம் அறிவித்தார். தமிழ்நாட்டின் தொழில் நகரமான திருப்பூர் டாலர் சிட்டி என்றழைக்கப் படுகிறது. திருப்பூரில் பின்னலாடைத் தொழில் கடந்த பல ஆண்டு காலமாக கோலோச்சி வரும் நிலையில், அமெரிக்காவின் புதிய வரி விதிப்பால் பின்னலாடைத் துறை உட்பட இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் பாதிக்கப்படுமென தொழில்துறையினர் கருதுகின்றனர்.

திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் 30 சதவீதம் ஏற்றுமதி, அமெரிக்க சந்தையை நம்பி இருப்பதால், இந்த வரி விதிப்பு அவர்களது ஏற்றுமதியை வெகுவாக குறைக்கும். அமெரிக்கா இந்த வரியை விதிப்பதற்கு, இந்திய பொருட்களின் மீது அமெரிக்கா விதித்திருந்த வர்த்தகக் கட்டுப்பாடுகளை காரணம் காட்டியுள்ளது.

இது தொடர்பாக திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் கூறியதாவது: இந்தியாவின் இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீதம் அமெரிக்கா வரி விதித்திருப்பது ஏமாற்றத்தை அளிக்கிறது. இருப்பினும் இது நீண்ட காலம் நீடிக்காது என கருதுகிறோம். இந்த வரி விதிப்பை பொறுத்தவரை தெற்காசிய நாடுகளான வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விதித்துள்ள வரி, இந்தியாவைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது.

இதன் காரணமாக இந்தியாவுக்கு கூடுதலான சாதகங்கள் மட்டுமே ஏற்படும். இருப்பினும் கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனேஷியா, வியட்நாம் போன்ற நாடுகளுக்கு மிகவும் குறைவாக வரி விதிக்கப்பட்டுள்ளது. அங்கு ஏற்றுமதி மிக குறைந்த அளவிலேயே நடைபெறுவதால், பெரிய அளவில் வர்த்தக பாதிப்பு இருக்காது.

இருப்பினும் இந்த வரி விதிப்பானது, நீண்ட காலம் தொடரும் பட்சத்தில் இந்தியா – அமெரிக்கா வர்த்தகமானது சற்று பின்னடைவை ஏற்படுத்தும். குறிப்பாக இந்த வரிவிதிப்பின் காரணமாக ரூ.100-க்கு வாங்க வேண்டிய பொருட்களை ரூ.126 கொடுத்து அமெரிக்க வாடிக்கையாளர்கள் வாங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவார்கள். தற்போது வரை, அமெரிக்காவுக்கு 30 சதவீத ஏற்றுமதியானது நடைபெற்று வருகிறது.

இந்த வரி விதிப்பில் தொடரும்பட்சத்தில், ஏற்றுமதி சதவீதம் குறைவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும். இதுகுறித்து இரு நாடுகளும் பேச்சு வார்த்தை நடத்தி, வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என்றனர்.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் இணை செயலாளர் குமார் துரைசாமி கூறியதாவது: வியட் நாமை விட, இந்தியாவுக்கு தற்போது வரி அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்காவிடம் இந்த வார இறுதியில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்தியாவில் இருந்து பெறும் ஆயத்த ஆடைகளை உடனடியாக வேறெங்கும் மாற்ற முடியாது.

அமெரிக்காவுடனான வர்த்தகத்தில், பின்னலாடை தொழில் வளர்ச்சி அல்லது வீழ்ச்சி என்பதை ஆகஸ்ட் மாதம் முழுவதும் நடைபெற உள்ள பேச்சுவார்த்தைக்கு பின்னர்தான் தெரியவரும். இதன் விளைவுகள் தெரியவர குறைந்தபட்சம் 6 மாதங்கள் ஆகும். வரிவிதிப்பால் ஏற்படும் வீழ்ச்சியை அடுத்தாண்டு ஜனவரி மாதம் தான் தெரியவரும், என்றார்.

இதனிடையே, “இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரி மற்றும் அபராத விதிப்பு குறித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் நடவடிக்கை, ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக ‘சைமா’ தொழில் அமைப்பு தெரிவித்துள்ளது. அதன் விவரம் > அமெரிக்காவின் 25% வரியால் இந்திய ஜவுளி, ஆடை ஏற்றுமதிக்கு எத்தகைய பாதிப்பு? – ‘சைமா’ விவரிப்பு

நன்றி

Leave a Reply