கோவை: அமெரிக்க வரி விதிப்பின் தாக்கத்தை சமாளிக்க அவசர கால கடன் உத்தரவாதத் திட்டத்தின் (இசிஎல்ஜிஎஸ்) கீழ் 30 சதவீத பிணையமில்லாத கடன் மற்றும் 5 சதவீத வட்டி மானியத்துடன் நிவாரணத் தொகுப்பு வழங்குவது தொடர்பாக பிரதமரிடம் தமிழக முதல்வர் பரிந்துரைக்க வேண்டும் என தென்னிந்திய மில்கள் சங்கம்(சைமா) கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து ‘சைமா’ தலைவர் டாக்டர் எஸ் கே.சுந்தரராமன் கூறியதாவது: நாட்டின் ஒட்டு மொத்த ஜவுளி உற்பத்தித்திறனில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ள தமிழ்நாடு ஜவுளித் தொழில், நாட்டின் மொத்த ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதியில் 28 சதவீத பங்கைக் கொண்டுள்ளது.
உலகளாவிய போட்டித் தன்மையை மேம்படுத்தவும், ஏற்றுமதியை அதிகரிக்கவும் தமிழக அரசு தொடர் நடவடிக்கைகள் மற்றும் கொள்கைத் தலையீடுகளை மேற்கொண்டு வருகிறது. நூற்பு நவீனமய படுத்துவதற்காக 6 சதவீத வட்டி மானியம், ஆடை, வீட்டு ஜவுளித் துறைக்கு 50 சதவீதம் மூலதன மானியம் மற்றும் தொழில்நுட்ப ஜவுளிக்கான ஆலோசகரை ஈடுபடுத்துவதற்கு 50 சதவீத மானியம் போன்ற சமீபத்திய கொள்கைத் தலையீடுகள் ஜவுளி தொழிலுக்கு உத்வேகமாக உள்ளன.
இந்நிலையில், அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு அறிவிப்பு நாட்டின் மிகப்பெரிய ஜவுளி ஏற்றுமதி மாநிலமான தமிழ்நாட்டுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய ஜவுளித் தொழிலில் குறிப்பாக தமிழக ஜவுளித் தொழிலில் அமெரிக்க வரி விதிப்பைக் குறைக்க மாநில மற்றும் மத்திய அரசுகளின் உடனடித் தேவை குறித்து தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா முன்னிலையில், பல்வேறு தொழில்துறைகளை உள்ளடக்கிய குழுவினர் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக முதல்வரை சந்தித்தது. ஜவுளித்தொழில் சார்பில் குறிப்பாணை சமர்பிக்கப்பட்டது.
அமெரிக்கக் கட்டணத் தாக்கத்தால் ஈடு செய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தக்கூடிய கடுமையான நெருக்கடியில் இருந்து (உற்பத்தி நிறுத்தம், மாற்றுச் சந்தைகளைக் கண்டறிதல், தற்போதுள்ள வாடிக்கையாளர்களைத் தக்கவைத்தல்) மற்றும் ஜவுளித் தொழிலை பாதுகாக்க உடனடி கொள்கைத் தலையீடுகளை பரிந்துரைத்து பிரமதருக்கு கடிதம் மூலம் தெரிவிக்க நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை விடுக்கப்பட்டது.
அசல் தொகையை திருப்பிச் செலுத்துவதற்கு இரண்டு ஆண்டு கால அவகாசத்தை நீட்டிக்கவும், அவசர கால கடன் உத்தரவாதத் திட்டத்தின் (இசிஎல்ஜிஎஸ்) கீழ் 30 சதவீத பிணையமில்லாத கடன் மற்றும் 5 சதவீத வட்டி மானியத்துடன் வழங்கவும், பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரியை நீக்கவும், சர்வதேச வலையில் மூலப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யவும் பிரமதருக்கு கடிதம் மூலம் தமிழக முதல்வர் பரிந்துரைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும் தற்போது உள்ள நெருக்கடியான சூழலை எதிர்கொள்ள தமிழக அரசு ஒற்றைச் சாளர வழிமுறையின் மூலம் விரைவான ஏற்றுமதி பணத்தைத் திரும்பப் பெறவும், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வரி கட்டமைப்புக்கான மாநில ஜிஎஸ்டி ரீபண்ட் கோரிக்கைகளை விரைவுபடுத்தவும், பணி மூலதனத் தடையைத் தடுக்கவும், அது தொடர்பான நிதி அழுத்தத்தைக் குறைக்கவும் நடவடிக்க எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது” என்று சுந்தரராமன் கூறியுள்ளார்.