அமைச்சர்கள், Mp க்கள் சிலர், இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்திருந்த தங்களது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் அறிக்கையில் காணப்பட்ட பிழைகளைச் சரிசெய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்கள் அறிக்கைகளில் இருந்த குறைகளைச் சரிசெய்வதற்காக ஆணையக்குழுவிடம் கடிதங்கள் மற்றும் சத்தியக் கடதாசிகளைச் சமர்ப்பித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார, சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கையைச் சமர்ப்பித்தபோது தன்னிடமும் தவறு நிகழ்ந்ததை ஒப்புக்கொண்டார். அந்தச் சம்பவம் மோசடி அல்ல எனவும் அது தவறவிடப்பட்ட தகவல் என்றும், அந்தப் பிழையைத் தாம் உடனடியாகச் சரிசெய்துவிட்டதாகவும் கூறினார்.
“நான் நீதி அமைச்சராக இருந்தாலும், தாமும் ஒரு மனிதனே” என்றும் அவர் குறிப்பிட்டார். சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கையைப் பூர்த்தி செய்வதற்கான படிவம் சிக்கலான தன்மை கொண்டது என்றும், தகவல்களைப் பூர்த்தி செய்யும் போது எந்தவொரு தனிமனிதனுக்கும் தவறுகள் நேர வாய்ப்புள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
