‘அமைதி அதிபர்’ – ட்ரம்ப்புக்கு அடைமொழி கொடுத்து அழகு பார்த்த வெள்ளை மாளிகை | ‘The Peace President’ – White House cheers on

வாஷிங்டன்: அமைதிக்கான நோபல் பரிசு நாளை (அக்.10) அறிவிக்கப்படவுள்ள நிலையில், அது ட்ரம்ப்புக்கு கிடைக்கும் வாய்ப்பில்லை என்பதும் தெரிந்துவிட்ட நிலையில், வெள்ளை மாளிகை அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் அண்மைய புகைப்படம் ஒன்றை பகிர்ந்து அதில் ‘அமைதி அதிபர்’ ( The Peace President) என்று அடைமொழி கொடுத்து அழகு பார்த்துள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் போர் உள்பட 7 போர்களை நிறுத்திவிட்டேன் என்று மீண்டும் மீண்டும் மார்தட்டிக் கொண்டிருந்த ட்ரம்ப், ‘நார்வேஜியன் நோபல் கமிட்டி தனக்கு அமைதிக்கான நோபல் பரிசைக் கொடுக்காமல் இருப்பதற்கான காரணங்களை எப்படியாவது தேடிக் கண்டுபிடிக்கும்’ என்று நம்பிக்கையிழந்து புலம்ப ஆரம்பித்துவிட்டார்.

ட்ரம்ப் முன்மொழிந்த அமைதி ஒப்பந்தத்துக்கு இஸ்ரேலும், ஹமாஸும் ஒப்புக் கொண்டுள்ள நிலையில், காசாவில் முதற்கட்ட தற்காலிக போர்நிறுத்தம் அமலாகவிருக்கிறது. இருந்தும் சூழலில்தான் ட்ரம்ப் தன் கனவான அமைதிக்கான நோபல் பரிசு மீதான நம்பிக்கையை இழந்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் நிருபர் ஒருவர் ட்ரம்ப்பிடம், அமைதிக்கான நோபல் பரிசை நீங்கள் பெறுவதற்கான சாத்தியம் என்னவென்று கேட்க, அதற்கு ட்ரம்ப். “எனக்கு எந்தக் கருத்தும் இல்லை. மார்கோ ரூபியோவிடம் கேட்டால் நாங்கள் 7 போர்களை நிறுத்தியுள்ளோம் என்பதைச் சொல்வார். 8-வது போர் நிறுத்தத்துக்கு அருகில் வந்துவிட்டோம். ரஷ்யப் போரையும் விரைவில் நிறுத்துவோம். வரலாற்றில் இதுவரை இத்தனை போரை நிறுத்தியவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். எனினும், நார்வேஜியன் நோபல் கமிட்டி தனக்கு அமைதிக்கான நோபல் பரிசைக் கொடுக்காமல் இருப்பதற்கான காரணங்களை எப்படியாவது தேடிக் கண்டுபிடிக்கும் ” என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.

ட்ரம்ப் இப்படி நம்பிக்கை இழந்துவிட்ட நிலையில்தான் அவரது புகைப்படத்துக்கு அமைதி அதிபர் கேப்ஷனிட்டுப் பகிர்ந்துள்ளது வெள்ளை மாளிகை.

அதிபர் ட்ரம்ப்பின் முதல் பதவிக்காலத்திலும் அவர் அமைதிக்கான நோபல் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் அது அவருக்குக் கிடைக்கவில்லை. ஆனால், முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு அவரது முதல் பதவிக்காலத்திலேயே அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க >> இரு போர்களும் சவால்களும்: ட்ரம்ப்புக்கு ‘அமைதி நோபல்’ கிட்டுவது சாத்தியம் தானா?

நன்றி

Leave a Reply