ஜனாதிபதி அநுரகுமாரவிற்கும் IMF பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (07) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. கடன் மறுசீரமைப்பு செயல்பாட்டில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆறாவது தவணையை வழங்குவதற்கு முன்னதாக நடத்தப்படும் ஐந்தாவது மீளாய்வின் இடைக்காலக் கலந்துரையாடலாக இது நடத்தப்பட்டது.
பொருளாதார ரீதியாக வங்குரோத்து நிலையிலிருந்த நாட்டை, அதிலிருந்து விடுவித்து அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்வதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும் என்றும், இதற்காக அரசாங்கத்திடம் மூலோபாயத் திட்டம் இருப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இங்கு தெரிவித்தார்.
இந்த வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு, சர்வதேச நாணய நிதியம் வழங்கும் ஆதரவை தான் பெரிதும் பாராட்டுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
பொருளாதார மறுமலர்ச்சி இலக்கை அடைவதற்கு, அதிகளவான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பது அவசியம் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அதற்காக முதலீட்டிற்கு உகந்த சூழலை நாட்டில் உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.