மத்திய பிரதேசத்தில் உள்ள மகாராஜா யஷ்வந்த்ராவ் அரச வைத்திய சாலையில் எலி கடித்ததில் இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இது குறித்து மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “மத்தியப் பிரதேசத்தின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையில் எலி கடித்து இரண்டு பிறந்த குழந்தைகள் இறந்தனர். இது தற்செயல் நிகழ்வு அல்ல, இது முழுமையான கொலை. இந்த சம்பவம் மிகவும் கொடூரமானது, மனிதாபிமானமற்றது மற்றும் அர்த்தமற்றது. இதைப் பற்றிக் கேள்விப்பட்டாலே முதுகுத்தண்டில் நடுக்கம் ஏற்படுகிறது.
சுகாதாரத் துறை வேண்டுமென்றே தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இப்போது சிகிச்சை பணக்காரர்களுக்கு மட்டுமே. ஏழைகளுக்கு, அரசு மருத்துவமனைகள் இனி உயிர் காக்கும் இடங்களாக இல்லை, ஆனால் மரணக் குகைகளாக மாறிவிட்டன.
பிரதமர் மோடியும் மத்தியப் பிரதேச முதல்வரும் வெட்கித் தலைகுனிய வேண்டும். உங்கள் அரசாங்கம் நாட்டின் மில்லியன் கணக்கான ஏழைகளின் சுகாதார உரிமையைப் பறித்துவிட்டது.
இப்போது குழந்தைகள் அவர்களின் தாய்மார்களின் மடியில் இருந்து பறிக்கப்படுகிறார்கள்” என்று ராகுல் கடுமையாக சாடினார்.
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க இந்தூர் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.