கனடா பகிரங்க டென்னிஸ் தொடரின் காலிறுதிப்போட்டியில் அவுஸ்ரேலியாவின் பொப்பிரினை ( Popyrin) வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு அலெக்ஷாண்டர் சுவரேவ் (Alexander Zverev) முன்னேறியுள்ளார்.
முன்னணி வீர வீராங்கனைகள் பங்கேற்கும் கனடா பகிரங்க சர்வதேச டென்னிஸ் போட்டி டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது. தற்போது காலிறுதிப்போட்டிகள் நடைபெற்று வருகின்ற நிலையில் முன்னனி வீரர் அலெக்ஷாண்டர் சுவரேவ் பொப்பிரினை எதிர்கொண்டார்.
ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இரண்டாவது காலிறுதிப்போட்டியானது முதல் செட்டை யார் கைப்பற்றுவார்கள் என்ற பரபரப்புக்குள் மத்தியிலேயே சென்றது.
இருந்தும் சிறப்பாக செயற்பட்ட அவுஸ்ரேலிய வீரரான பொப்பிரின் 7-6 என முதல் செட்டை தனதாக்கினார். பின்னர் இரண்டாவது செட் ஆட்டம் தொடங்கியதும் சுதாகரித்துக்கொண்ட சுவெரவ் இரண்டாவது செட் ஆட்டத்தை 6-4 என தனதாக்கி போட்டியை தீர்க்கமான தருணத்திற்கு கொண்டு சென்றார்.
இரு வீரர்களில் யார் அரையிறுதிக்கு செல்ல போகிறார்கள் என்ற தீர்க்கமான தருணத்தில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அலெக்ஷாண்டர் சுவெரவ் 3வது செட்டை 6-3 என இலகுவாக கைப்பற்றி அரையிறுதிக்கான வாய்ப்பை உறுதிப்படுத்தினார். ஒட்டுமொத்த முடிவுகளின் அடிப்படையில் 6-7, 6-4, 6-3 என்ற அடிப்படையில் பொப்பிரினை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு தகுதிப்பெற்று அசத்தினார்.
தற்போது தனது 75வது அரையிறுதிப் போட்டிக்கு ஸ்வெரெவ் முன்னேறியுள்ளதுடன் 196 தொடர்களில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ள நோவக் ஜோகோவிச்சுடன் அவரும் இணைந்துகொண்டார். மாஸ்டர்ஸ் 1000களில் தனது 21வது அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம், கடந்த ஆண்டு ரோலக்ஸ் பெரிஸ் மாஸ்டர்ஸுக்குப் பிறகு அவர் பெற்ற முதல் வெற்றியாக இது பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.