அவதூறு வழக்கு விசாரணை – கேதீஸ்வரன் இரண்டு மணித்தியாலங்கள் சாட்சியம்

யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆ. கேதீஸ்வரன் அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அவர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்த அவதூறு வழக்கு, பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இவ்விசாரணையின் போது கேதீஸ்வரன் சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக நீதிமன்றத்தில் விரிவாக சாட்சியமளித்தார்.

இந்த வழக்கு, 04.07.2024 அன்று சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பணியாற்றியிருந்த போது அர்ச்சுனா முன்வைத்த குற்றச்சாட்டை அடிப்படையாகக் கொண்டதாகும். கேதீஸ்வரன் வலி நிவாரணிகளை போதைப்பொருட்களாக மருந்தகங்கள் மூலம் மாணவர்களுக்கு விற்பனை செய்கிறார் என அர்ச்சுனா குற்றஞ்சாட்டியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டை அவர் வெளியிட்ட காணொளி மூலம் பரப்பியதையும், அதனைத் தாமே பதிவேற்றம் செய்ததையும் ஆரம்ப விசாரணையில் அர்ச்சுனா ஏற்றுக்கொண்டதுடன், அதன் உண்மைத்தன்மையை நிரூபிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

சாட்சியமளித்த கேதீஸ்வரன், 2022 முதல் 2024 வரை மருத்துவச் சீட்டு இன்றி வலி நிவாரணிகள் வழங்கப்பட்டதாகக் கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பாக தாம் எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பித்தார். மருந்தகங்கள் மற்றும் அரச, தனியார் வைத்தியசாலைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கைகள் பற்றியும் ஆதாரங்களுடன் விளக்கமளித்தார்.

மேலும், குறித்த காணொளி நீதிமன்றில் திரையிடப்பட்டதுடன், தமது 35 ஆண்டுகால மருத்துவ சேவையில் எந்தக் களங்கமும் இல்லாத நிலையில் இக்குற்றச்சாட்டு தமக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாக கேதீஸ்வரன் தெரிவித்தார். குறிப்பாக, அந்தக் காணொளி வெளியானதன் பின்னர் வெளிநாடுகளிலிருந்து தமக்கும் குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல்கள் வந்ததாகவும் அவர் சாட்சியத்தில் குறிப்பிட்டார்.

அடுத்த அமர்வில், கேதீஸ்வரன் அர்ச்சுனாவின் சட்டத்தரணியால் குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார். வழக்கில் இரு தரப்பினரும் மூத்த சட்டத்தரணிகளுடன் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#Dr. A. Ketheeswaran #MP Archuuna #Chavakachcheri_Hospital#Defamation Case

நன்றி

Leave a Reply