ஆப்கானிஸ்தானை எட்டு ஓட்டங்களால் வீழ்த்திய பங்களாதேஷ் சூப்பர் 4 நம்பிக்கையுடன்!

2025 ஆசியக் கிண்ணத் தொடரில் நேற்றிரவு (16) நடைபெற்ற போட்டியில் பங்களாதேஷ் அணியானது 08 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை தோற்கடித்தது.

இந்த வெற்றியின் மூலமாக சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும் நம்பிக்கையை அவர்கள் உயிர்ப்புடன் வைத்தனர்.

மேலும், இந்த வெற்றியின் மூலம் பங்களாதேஷ் மூன்று போட்டிகளில் இருந்து நான்கு புள்ளிகளுடன் தங்கள் குழு நிலைப் போட்டிகளை நிறைவு செய்தது.

அதே நேரத்தில் ஆப்கானிஸ்தான் இரண்டு புள்ளிகளைப் பெற்றுள்ளது.

பங்களாதேஷின் வெற்றி, இலங்கைக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் இறுதி குழு நிலைப் போட்டியை மெய்நிகர் நாக் அவுட்டாக மாற்றியுள்ளது.

குழுவில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் மட்டுமே சூப்பர் 4 நிலைக்கு முன்னேற முடியும்.

பங்களாதேண் அணி, அடுத்த சுற்றுக்கு முன்னேற இலங்கை அணியின் வெற்றியை எதிர்பர்த்துக் கொண்டிருக்கின்றது.

அபுதாபி ஷேக் சயீத் மைதானத்தில் நேற்றிரவு ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற லிட்டன் தாஸ் தலைமையிலான அணியானது முதலில் துடுப்பெடுத்தாடியது.

தொடக்க வீரர்களான சைஃப் ஹாசன் மற்றும் டான்சித் ஹசன் தமீம் ஆகியோர் உறுதியான அடித்தளத்தை அமைத்து.

இவர்கள் முதலாவது விக்கெட்டுக்காக 63 ஓட்டங்களை பகிர்ந்தனர்.

கடந்த 11 டி20 இன்னிங்ஸ்களில் ஒரு பங்களாதேஷ் தொடக்க ஜோடி 10 ஓட்டங்களுக்கு மேல் இணைப்பாட்டத்தை அமைத்தது இதுவே முதல் முறை.

பின்னர் சைஃப் ஹசன் 28 பந்துகளில் 30 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார், அதே நேரத்தில் டான்சித் ஹசன் சிறப்பாக விளையாடி 31 பந்துகளில் 52 ஓட்டங்களை எடுத்தார்.

எனினும் பங்களாதேஷ் அணி, வலுவான தொடக்கத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டது.

நடுத்தவர வரிசை துடுப்பாட்டத்தில் கைகோர்த்த ஷமிம் ஹொசைன் மற்றும் ஜேக்கர் அலி ஆகியோரும் வேகத்தை அதிகரிக்க போராடினர்.

அத்துடன், நூருல் ஹசனின் விறுவிறுப்பான ஆட்டம் பங்களாதேஷுக்கு இன்னிங்ஸின் முடிவில் மிகவும் தேவையான ஊக்கத்தை அளித்தது.

20 ஓவர்களில் அவர்கள் 5 விக்கெட்டுக்கு 154 ஓட்டங்களை சேர்த்தனர்.

ஆப்கானிஸ்தான் பந்துவீச்சு தாக்குதலுக்கு ரஷித் கான் மற்றும் நூர் அஹமட் ஆகிய சுழற்பந்து வீச்சாளர்கள் தலைமை தாங்கினர்.

அவர்கள் தந்திரமாகவும் கட்டுப்பாட்டுடனும் பந்து வீசி தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அஸ்மத்துல்லா உமர்சாய் தனது பங்கிற்கு ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.

இதையடுத்து பின்னர் பந்து வீச்சிலும் பங்களாதேஷ் அணி சிறப்பாக செயல்பட்டது.

நசும் அகமட் சரியான தொடக்கத்தை வழங்கினார்.

இடது கை சுழற்பந்து வீச்சாளர் முதல் ஓவரின் முதல் பந்திலேயே ஆப்கானிஸ்தான் வீரர் செடிகுல்லா அடாலை எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழக்கச் செய்தார்.

இதையடுத்து சிறிது நேரத்திலேயே இப்ராஹிம் சத்ரானை ஆட்டமிழக்கச் செய்தார்.

இந்த ஆரம்ப அடிகள் 155 என்ற இலக்கினை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தானை உடனடியாக பின்னுக்குத் தள்ளியது.

30 பந்துகளில் 35 ஓட்டங்கள‍ை எடுத்து இன்னிங்ஸை நங்கூரமிட முயன்ற ரஹ்மானுல்லா குர்பாஸ் மீது அனைவரின் பார்வையும் திரும்பியது.

இருப்பினும் அவரும் ரிஷாத் ஹொசைனின் பந்து வீச்சில் ஜாகர் அலியிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

அடுத்து வந்த ஆப்கானிஸ்தான் வீரர்களாலும் வெற்றிக்கு தேவையான ஓட்ட வேகத்தை அதிகரிக்க முடியாது போனதால், இறுதியாக அவர்கள் 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக நசும் அகமட் தெரிவானார்.

Image

நன்றி

Leave a Reply