ஆஸ்திரேலியா: பாண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு; 12 பேர் பலி, 29 பேர் காயம்! – தீவிரவாதச் செயல் என அறிவிப்பு

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் அமைந்துள்ள பிரபலமான பாண்டி கடற்கரையில் (Bondi Beach), யூத சமூகத்தினரைக் குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மொத்தம் 12 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 29 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் நியூ சவுத் வேல்ஸ் பொலிஸ் தெரிவித்துள்ளது. 

ஹனுக்கா பண்டிகையின் தொடக்கத்தைக் குறிக்கும் நிகழ்வில் இந்தத் தாக்குதல் நடந்தபோது, 1,000க்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்தனர்.

இந்தச் சம்பவம், “சிட்னியின் யூத சமூகத்தைக் குறிவைத்து வடிவமைக்கப்பட்டது” என்றும் “இதுவொரு தீவிரவாத சம்பவம்” என்றும் பொலிஸ் ஆணையாளர் மால் லன்யோன் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

இந்தத் தாக்குதலில் இரண்டு துப்பாக்கிதாரிகள் ஈடுபட்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது. அவர்களில் ஒருவர் கொல்லப்பட்டார், மற்றவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். எனினும், மூன்றாவது துப்பாக்கிதாரியின் சாத்தியக்கூறு குறித்து நியூ சவுத் வேல்ஸ் பொலிஸ் தீவிரமாக விசாரித்து வருகிறது.

இச்சம்பவத்தின் போது, ஒரு குழந்தை உட்பட 29 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் அடங்குவர். அவர்கள் கவலைக்கிடமான நிலையில் அறுவை சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொல்லப்பட்ட துப்பாக்கிதாரியுடன் தொடர்புடைய ஒரு காரில், வெடிக்கும் சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஆணையர் லன்யோன் தெரிவித்தார். இதன் காரணமாக, வெடிகுண்டு அகற்றும் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வாகனத்தை ஆய்வு செய்தனர்.

ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பனேஸ் (Anthony Albanese) இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ளார். இது “தீய யூத-எதிர்ப்பு தீவிரவாதம், நம் தேசத்தின் இதயத்தைத் தாக்கிய செயல்” என்று அவர் தெரிவித்தார். இந்தத் தாக்குதலுக்கு யூத-எதிர்ப்பு உணர்வே காரணம் எனக் கூறிய அவர், “இத்தகைய வன்முறை மற்றும் வெறுக்கத்தக்க செயல்களுக்கு நாட்டில் இடமில்லை”  என்று வலியுறுத்தினார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

நன்றி

Leave a Reply