இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரை சமப்படுத்தியது இந்திய அணி!

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 05வதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.

போட்டியின் இறுதி நாளான இன்று இங்கிலாந்து அணி வெற்றிப்பெற 35 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் 04 விக்கட்டுக்களே கைவசம் இருந்த நிலையில் சிறப்பாக பந்துவீசிய இந்திய அணி 06 ஓட்டங்களால் வெற்றிப்பெற்று தொடரை 2-2 என சமப்படுத்தி அசத்தியது.

இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி இருந்தது.

இந்நிலையில் முதல் 4 போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி 2-1 என முன்னிலைப்பெற்றிருந்த நிலையில் 5வது டெஸ்ட் போட்டியின் இறுதி நாள் போட்டி இன்று இடம்பெற்றது.

இரு அணிகளுக்குமே சம வெற்றிவாய்ப்பு இருந்த நிலையில் இந்திய அணி இன்றைய போட்டியில் சிறப்பாக பந்துவீசி எஞ்சியிருந்த 4 விக்கட்டுக்களையும் கைப்பற்றி தொடரை சமப்படுத்தி அசத்தியது.

நேற்றைய 4ம் நாள் ஆட்ட நிறைவில் இங்கிலாந்து அணி இந்திய அணி நிர்ணயித்த 374 ஓட்டங்களை இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடி இருந்தது. ஆட்ட நிறைவில் 35 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் 6 விக்கட்டுக்களை இழந்திருந்தது.

இன்றைய 5வதும் இறுதியுமான நாளில் இந்திய பந்துவீச்சாளர்களான மொஹமட் சிராஜ் மற்றும் பிரதிஸ் கிருஸ்ணா ஆகியோர் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி அடுத்தடுத்து விக்கட்டுக்களை கைப்பற்றி இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சியளித்தனர்.

இறுதி விக்கட்டுக்காக காயமடைந்திருந்த கிறிஸ் வோக்ஸ் தனது காயத்தையும் பொறுப்படுத்தாது களத்தில் இறங்கிய தருணத்தில் ஒட்டுமொத்த மைதானத்தில் குழுமியிருந்தவர்கள் கைதட்டி அவரை வரவேற்றிருந்தனர்.

வெற்றிப்பெற 17 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் இவர்கள் இருவரும் 10 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்த நிலையில் கஸ் அட்கின்சன் 17 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் சிராஜின் பந்துவீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.

இதனால் இந்திய அணி 06 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றதுடன் தொடரை 2-2 என சமப்படுத்தி அசத்தியது. சிறப்பாக பந்துவீசிய மொஹமட் சிராஜ் 5 விக்கட்டுக்களையும் பிரதிஸ் கிருஸ்ணா 4 விக்கட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை போட்டியின் ஆட்ட நாயகனாக  9 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய இந்திய அணியின் பந்துவீச்சாளரான மொஹமட் சிராஜ்  தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இம்முறை  தொடர் நாயகன் விருது, தொடரில்  சிறப்பாக செயற்பட்டமைக்காக இரு அணிகளுக்குமே வழங்கி வைக்கப்பட்டது.  அந்த வகையில் இங்கிலாந்து அணி சார்பாக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ஹரிபுரூக் மற்றும் இந்திய அணி சார்பில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய இந்திய அணித் தலைவர் சுப்மன் கில் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

 

நன்றி

Leave a Reply