”இது முழு சமூகத்தின் சாதனை…” – அமைதி நோபல் வென்ற மரியா கொரினா மச்சாடோ விவரிப்பு | I certainly do not deserve this: Maria Corina Machado

”ஓ மை காட். என்னிடம் வார்த்தைகளே இல்லை. நான் ஒரு தனிநபர்தான். இது ஓர் இயக்கம். இது முழு சமூகத்தின் சாதனை” என அமைதிக்கான நோபல் பரிசு வென்றுள்ள மரியா கொரினா மச்சாடோ தெரிவித்திருப்பது பலரையும் நெகழ்ச்சியடைச் செய்துள்ளது.

2025-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா நாட்டில் ஜனநாயகம் மலர தொடர்ந்து போராடிய, வெனிசுலாவின் ‘இரும்புப் பெண்மணி’ என்று அழைக்கப்படும் மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. “2025-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு, வெனிசுலா மக்களுக்கு ஜனநாயக உரிமைகளைப் பெற்றுத் தருவதற்காக அயராது போராடி, நாட்டில் சர்வாதிகாரத்தில் இருந்து ஜனநாயகம் மலர குரல் கொடுத்து வரும் மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்படுகிறது.” என ஸ்வீடிஷ் அகாடமி தெரிவித்துள்ளது.

நார்வே நோபல் நிறுவனத்தின் இயக்குநர் கிறிஸ்டியன் பெர்க் ஹார்ப்விகென், மரியா கொரினா மச்சாடோவை தொடர்பு கொண்டு இதனைத் தெரிவித்தபோது அவர், கண்ணீர் விட்டு அழுதுள்ளார். மேலும் அவர், “ஓ மை காட். என்னிடம் வார்த்தைகளே இல்லை. நன்றி. நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். இது ஓர் இயக்கம். இது முழு சமூகத்தின் சாதனை. நான் ஒரு நபர் மட்டுமே. நான் நிச்சயமாக இதற்கு தகுதியானவர் அல்ல” என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “வெனிசுலா மக்கள் சார்பாக நான் கவுரவப்படுத்தப்பட்டதாக உணர்கிறேன். பணிவும் நன்றியுணர்வும் கொண்டவராக இருக்கிறேன். நாங்கள் எங்கள் இலக்கை இன்னும் அடையவில்லை. அதை அடைய நாங்கள் மிகவும் கடினமாக உழைத்து வருகிறோம். நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம்” என உறுதியாக நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

யார் இந்த மரியா கொரினா? – மரியா கொரினா மச்சாடோ, கடந்த 14 மாதங்களாக தலைமறைவாக வாழ்ந்து வருகிறார். அவரது உயிருக்கு ஆபத்து இருந்தாலும் கூட அவர் வெனிசுலாவை விட்டு வெளியேறவில்லை. இது அந்நாட்டு மக்கள் மத்தியில் அவருக்குப் பெரும் அபிமானத்தைப் பெற்றுத் தந்தது. மரியா, வெனிசுலாவின் ராணுவ ஆட்சி அகற்றப்பட்ட வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகளை ஒன்றுதிரட்டினார். அங்கே ஜனநாயகம் அமைதி வழியில் மலர அவர் வித்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply