நியூயார்க்: இந்தியப் பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். இதன்மூலம் இப்போது இந்தியாவுக்கு மொத்தம் 50 சதவீதம் வரி விதித்துள்ளது அமெரிக்கா. தனது எதிர்ப்பை மீறி ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்து வருவதாக கூறி, இந்த கூடுதல் வரியை ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான புதிய வரி விதிப்பு நடவடிக்கை ஆகஸ்ட் 7-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அமெரிக்கா அறிவித்தது. இந்நிலையில், இந்தியாவுக்கு ஏற்கெனவே அறிவித்த 25% வரியோடு கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரி விதிப்பு காரணமாக அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீதம் வரியை இந்தியா செலுத்த வேண்டி உள்ளது. இது சீனாவை காட்டிலும் 20 சதவீதமும், பாகிஸ்தானை காட்டிலும் 21 சதவீதம் அதிகமாகும்.
“ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருவதை நான் அறிவேன். அதனால், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீது கூடுதல் வரியை விதிப்பது அவசியம் என்று கருதுகிறேன்” என ட்ரம்ப் தற்போது தனது உத்தரவில் தெரிவித்துள்ளார். முன்னதாக, அடுத்த 24 மணி நேரத்தில் இந்தியா மீதான வரியை கணிசமாக உயர்த்தப் போவதாக ட்ரம்ப் நேற்று எச்சரித்திருந்தார். இந்நிலையில், சொன்னபடியே தற்போது கூடுதல் வரியை அவர் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு ஓராண்டில் ரூ.8,650 கோடி அளவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்கிறது. இது வர்த்தகத்தில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது. இருப்பினும் இந்த கூடுதல் விரி விதிப்பு வரும் 27-ம் தேதி முதல் அமலாகும் என தெரிகிறது. ட்ரம்ப் தனது உத்தரவில் 21 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளார்.
முன்னதாக, நேற்று தனது சமூக வலைதள பக்கத்தில், “இந்தியா ரஷ்ய எண்ணெயை பெருமளவில் வாங்குவது மட்டுமல்லாமல், வாங்கிய எண்ணெயில் பெரும்பகுதியை திறந்த சந்தையில் அதிக லாபத்திற்கு விற்கிறது. ரஷ்ய போர் இயந்திரத்தால் உக்ரைனில் எத்தனை பேர் கொல்லப்படுகிறார்கள் என்பது பற்றி அவர்களுக்கு கவலையில்லை. இதன் காரணமாக, அமெரிக்காவிற்கு இந்தியா செலுத்தும் வரியை நான் கணிசமாக உயர்த்துவேன்” என்று ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, இந்திய வெளியுறவு அமைச்சகம் அளித்த விளக்கத்தில், “ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் இந்தியாவை தொடர்ந்து குறிவைத்து வருகின்றன. இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்து வந்த நாடுகள், உக்ரைன் போருக்கு பிறகு ஐரோப்பிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விநியோகிக்க தொடங்கிவிட்டன.
அந்த இக்கட்டான நேரத்தில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தோம். இதற்கு அமெரிக்காவும் ஆதரவு அளித்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை தடுக்க இந்தியாவுக்கு ஆதரவு அளிப்பதாக அமெரிக்கா கூறியது. இந்த விவகாரத்தில் இந்தியா மீது குற்றம் சுமத்தும் நாடுகள் ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன.
கடந்த 2023-ம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யாவுடன் 17.2 பில்லியன் யூரோ, கடந்த 2024-ம் ஆண்டில் 67.5 பில்லியன் யூரோ மதிப்பில் இருதரப்பு வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கிறது. இந்த சூழலில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதாக இந்தியா மீது குற்றம் சாட்டுவது நியாயமற்றது, ஏற்றுக் கொள்ள முடியாதது. அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இரட்டை வேடம் போடுகின்றன. நாட்டின் நலன் மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொள்ளும்” என்று தெரிவித்திருந்தது கவனிக்கத்தக்கது.
முன்னதாக, 69 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியனுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய வரி விதிப்பு உத்தரவில் டிரம்ப் கடந்த 31-ம் தேதி கையெழுத்திட்டார். இதில், சிரியாவுக்கு அதிகபட்சமாக 41 சதவீதவரி விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 14 ஆண்டுகளாக உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவுக்கு இது அதிக வரி விதிப்பாகும். அடுத்ததாக, லாவோஸ், மியான்மருக்கு 40 சதவீதம், சுவிட்சர்லாந்துக்கு 39 சதவீதம், இராக், செர்பியாவுக்கு 35 சதவீத வரி அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.