3
காங்கேசன்துறை துறைமுகத்தின் புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில், நேற்றைய தினம் புதன்கிழமை மாவட்ட செயலக அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் இந்திய இலங்கை கடற்போக்குவரத்திற்கு மேலதிகமாக இந்தியாவிலிருந்து கப்பல் மூலம் பொருட்களைகொண்டுவருதல் மற்றும் இங்கியிருந்து என்ன பொருட்களை கொண்டு செல்லலாம் எனவும் அதன் மூலம் ஏற்படும் தொழில் வாய்ப்பு மற்றும் சாதக பாதகங்கள் ஆராயப்பட்டது.
அத்துடன், காங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்தி தேவைகளுக்கான காணித் தேவைப்பாடு தொடர்பாகவும், இவ் துறைமுக அபிவிருத்தியை ஏற்படுத்துவதனூடாக எவ்வாறான சிறப்பான சேவைகளை பெற்றுக்கொள்ளமுடியும் அல்லது அதனால் ஏற்படும் பாதக விளைவுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக பிராந்திய இணைப்பை வலுப்படுத்துதல், வர்த்தகத்தை எளிதாக்குதல் மற்றும் வடக்கு மாகாணத்திற்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குதல், வேலைவாய்ப்புக்கள், சுற்றுலாத்துறை வளர்ச்சி , சுற்றுச்சூழல்தாக்கம், சமூக நடத்தையில் ஏற்படும் மாற்றம், அரச சேவைகள், போக்குவரத்து சேவைகள் போன்றவற்றின் அபிவிருத்திசார் விடயங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது .
இக்கலந்தரையாடலில் இலங்கை துறைமுக அதிகாரசபை உதவி முகாமைத்துவ பணிப்பாளர் ஜெ.ஏ.சந்திரரத்ன, பிரதம பொறியியலாளர் சி.எல்.தசநாயக்க, திட்ட ஒருங்கிணைப்பாளர் பி. கெட்டியாராய்ச்சி, பிரதம பொறியியலாளர் எஸ்.எச்.எம்.பி. அபயசேகர, நிகழ்சித்திட்ட முகாமையாளர் தேவசுரேந்திரா, பிரதம பொறியியலாளர் கே.ஆர்.என்.என்.எம் காரியவசம், யாழ்ப்பாண மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இ. சுரேந்நிரநாதன், உதவி மாவட்ட செயலாளர் உ. தர்சினி மற்றும் துறைசாா் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.