– இஸ்மதுல் றஹுமான் –
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட கஞ்சிபானை இம்ரானின் நெருங்கியவருக்கு தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிபதை நிராகரித்த நீதவான் அவரை பிணையில் செல்ல அனுமதித்தார்.
இந்தியாவில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட பாதல உலகத் தலைவரான கஞ்சிபானை இம்ரானின் நெருங்கியவரான கொழும்பு 13 சேர்ந்த மொஹமட் மிஹிலார் மொஹமட் அர்ஷாத் என்பவர் சட்ட விரோதமான இந்தியாவில் தங்கியிருக்கும் போது அந்நாட்டு பாதுகாப்புத் துறையினர் அவரை கைது செய்து இந்திய விமான சேவையின் இண்டிகோ 6ஈ- 1117 இலக்க விமானத்தில் நாடுகடத்தினர். 24ம் திகதி அதிகாலை 2.30 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த அவரை விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் திருமதி தர்ஷிமா பிரேமரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணை நடாத்துவதற்காக தடுப்புக்காவல் உத்தரவை பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகள் கோரினர்.
சந்தேக நபர் சார்பாக சட்டதரண துலீஷா விஜயசூரியவுடன் முன்னிலையான சிரேஷ்ட சட்டதரணி நெல்சன் குமாரநாயக்க எனது சேவை பெறுனர் தொடர்பாக குற்றச்சாட்டு முன்வைக்க எந்த சாட்சியங்களும் இல்லை. அவரிடம் எந்த ஒரு போதைப் பொருளும் இருக்கவில்லை. அதனால் சந்தேக நபரை தடுப்புக் காவல் உத்தரவில் தடுத்து வைக்க சட்டத்தில் இடமில்லை என வாதிட்டார்.
அதன் அடிப்படையில் சந்தேக நபரை ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுதலை செய்த மேலதிக நீதிபதி வழக்கை 28 ம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.