இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை தொடர்கிறது: ட்ரம்ப் அறிவிப்புக்கு பிரதமர் மோடி வரவேற்பு | India US trade talks continues PM Modi welcomes donald Trump s announcement

வாஷிங்டன்: இந்​தி​யா, அமெரிக்கா இடையே வர்த்தக பேச்​சு​வார்த்தை தொடர்​கிறது என்​றும், பிரதமர் மோடி​யுடன் பேச ஆவலாக உள்​ளேன் என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரி​வித்​துள்​ளார். இதற்கு பதில் அளிக்​கும் வகை​யில், ட்ரம்​புடன் பேச நானும் ஆவலாக உள்​ளேன் என பிரதமர் மோடி தெரி​வித்​துள்​ளார்.

அமெரிக்க அதிப​ராக 2-வது முறை​யாக பொறுப்​பேற்ற டொனல்டு ட்ரம்ப், உலக நாடு​கள் தங்​கள் நாட்டு பொருட்​களுக்கு அதிக வரி விதிப்​ப​தாக குற்​றம்​சாட்​டி​னார். இதனால், பதி​லுக்கு பதில் வரி விதிக்​கப்​படும் எனக் கூறி ஒரு பட்​டியலை வெளி​யிட்டார். இதன்​படி, இந்​திய பொருட்​களுக்கு 25% வரி விதித்​தார். இதனிடையே, இருதரப்பு வர்த்தக ஒப்​பந்​தம் ஏற்​படுத்​து​வது தொடர்​பாக இந்​தி​யா, அமெரிக்கா இடையே பல சுற்று பேச்சுவார்த்தை நடை​பெற்​றது. ஆனால், சில விஷ​யங்​களில் உடன்​பாடு எட்​டப்​ப​டாத​தால் இழுபறி நீடித்​தது.

இதேபோல, ரஷ்​யா-உக்​ரைன் போரை முடிவுக்​குக் கொண்டு வர ட்ரம்ப் தொடர்ந்து முயற்சி செய்து வரு​கிறார். இதன்​படி, ரஷ்​யா​விடம் கச்சா எண்​ணெய் வாங்​கு​வ​தால் உக்​ரைன் போருக்கு இந்​தியா மறை​முக​மாக உதவுவ​தாக குற்​றம்​சாட்​டி​னார். கச்சா எண்​ணெய் வாங்​கு​வதை நிறுத்​தா​விட்​டால் கூடு​தலாக 25% வரி விதிக்​கப்​படும் என அறி​வித்​தார். இதை ஏற்க இந்​தியா மறுத்​த​தால், கூடு​தலாக 25% வரி அமலுக்கு வந்​தது. இதன் மூலம் இந்​திய பொருட்​கள் மீது 50% வரி விதிக்​கப்​பட்​டுள்​ளது. இது நியாயமற்​றது என்​றும், ஏற்​கத்​தக்​கது அல்ல என்​றும் இந்​தியா தெரி​வித்​தது.

மேலும், பாகிஸ்​தான், இந்​தியா இடையி​லான போரை தான்​தான் நிறுத்​தினேன் என தொடர்ந்து கூறி வந்​தார். இதற்கு இந்​தியா மறுப்பு தெரி​வித்​தது. இதனால், அமெரிக்​கா, இந்​தியா இடையி​லான உறவில் உரசல் ஏற்​பட்​டது. இதற்கு நடு​வே, அதிபர் ட்ரம்ப் 4 முறை பிரதமர் மோடியை தொலைபேசி மூலம் தொடர்​பு​கொள்ள முயற்சி செய்​தார். ஆனால், அவரது அழைப்பை பிரதமர் மோடி ஏற்​க​வில்லை என தகவல் வெளி​யானது.

அமெரிக்கா​வுடன் உரசல் ஏற்​பட்ட நிலை​யில், பிரதமர் நரேந்​திர மோடி, 7 ஆண்​டுக்கு பிறகு சீனா​வுக்கு சென்​றார். அங்கு நடை​பெற்ற ஷாங்​காய் ஒத்​துழைப்பு மாநாட்​டில் பங்​கேற்​றார். அங்கு சீன அதிபர் ஜி ஜின்​பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்​தித்​துப் பேசி​னார். இந்த சந்​திப்பை ட்ரம்ப் விமர்​சித்​தார். மேலும் ட்ரம்​பின் வரி விதிப்​பால் இந்​தியா சீனா​வுடன் நெருங்கி வரு​வ​தாக அமெரிக்​காவைச் சேர்ந்த நிபுணர்​கள் குற்​றம்​சாட்​டினர்.

இதையடுத்​து, பிரதமர் மோடி எப்​போதும் எனது நண்​பர்​தான் என்​றும், ஆனால் அவரின் சில நடவடிக்​கைகளை நான் விரும்​ப​வில்லை என்​றும் ட்ரம்ப் சில தினங்​களுக்கு முன்பு கூறி​இருந்​தார். இது​போல இந்​தி​யா, அமெரிக்கா இடையே நல்ல நட்​புறவு உள்​ளது. அதுபற்றி கவலைப்​படத் தேவை​யில்லை என்​றும் ட்ரம்ப் கூறி​யிருந்​தார்.

இதற்கு பதில் அளிக்​கும் வகை​யில், அதிபர் ட்ரம்​பின் உணர்​வு​கள் மற்​றும் இரு நாடு​களுக்​கிடையி​லான உறவு​கள் குறித்த நேர்​மறை​யான மதிப்​பீட்டை பாராட்​டு​கிறேன் என்று பிரதமர் மோடி கூறி​யிருந்​தார்.

இந்த சூழ்​நிலை​யில், அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலை​தளத்​தில் நேற்று முன்​தினம் வெளி​யிட்ட பதி​வில், “இந்​தி​யா, அமெரிக்கா இடையிலான வர்த்தக பேச்​சு​வார்த்​தை​யில் ஏற்​பட்ட தடைகளுக்கு தீர்வு காண்​பது தொடர்​பான பேச்​சு​வார்த்தை தொடர்ந்து நடை​பெறுகிறது. வரும் வாரங்​களில் என்​னுடைய சிறந்த நண்​பர் பிரதமர் மோடி​யுடன் பேச ஆவலாக இருக்​கிறேன். இரண்டு சிறந்த நாடு​களுக்கு இடையி​லான வர்த்தக பேச்​சு​வார்த்தை வெற்​றிகர​மாக முடிவுக்கு வரு​வ​தில் எந்த சிரம​மும் இருக்​காது என்று நான் உறு​தி​யாக நம்​பு​கிறேன்” என கூறி​உள்​ளார்.

ட்ரம்​பின் கருத்​துக்கு பதில் அளிக்​கும் வகை​யில், பிரதமர் நரேந்​திர மோடி எக்ஸ் சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில், “இந்​தி​யா​வும் அமெரிக்கா​வும் நெருங்​கிய நட்பு நாடு​கள், அத்​துடன் இயற்​கை​யான கூட்​டாளி​யும் கூட. இந்​தி​யா, அமெரிக்கா இடையி​லான வர்த்தக பேச்​சு​வார்த்​தை, இருதரப்பு கூட்​டாண்​மை​யின் எல்​லை​யற்ற வாய்ப்​பு​களை திறக்​கும் என்ற நம்​பிக்கை எனக்கு இருக்​கிறது. இந்த பேச்​சு​வார்த்​தையை விரைந்து முடிக்க எங்​கள் அதி​காரி​கள் குழு முனைப்​புடன் செயல்​பட்டு வரு​கிறது. நானும் அதிபர் ட்ரம்​புடன் பேச ஆவலுடன் இருக்​கிறேன். இரு நாட்டு மக்​களுக்​கும் நல்ல எதிர்​காலத்தை உறுதி செய்ய நாங்​கள் ஒன்​றிணைந்து செயல்​படு​வோம்” என கூறி​யுள்​ளார்.

பிரதமர் மோடி எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்ட இந்த பதிவை, ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலை​தளத்​தில் பகிர்ந்​துள்​ளார். இது இருதரப்பு உறவில் முன்​னேற்​றம் ஏற்​படு​வதற்​கான அறிகுறி​யாக அமைந்​துள்​ளது.

அமெரிக்​கா​வின் முரண்​பாடு: இந்​தி​யா​வுடன் வர்த்தக பேச்​சு​வார்த்தை தொடர்​வ​தாக ட்ரம்ப் தெரி​வித்​துள்ள நிலை​யில், இந்​தியா மீது 100% வரி விதிக்​கு​மாறு ஐரோப்​பிய நாடு​களை அவர் வலி​யுறுத்தி உள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது.

அமெரிக்கா மற்​றும் ஐரோப்​பிய ஒன்​றிய அதி​காரி​களுக்கு இடையி​லான பேச்​சு​வார்த்​தை​யில் பங்​கேற்ற ட்ரம்ப், ரஷ்​யா​விடம் கச்சா எண்​ணெய் வாங்​கும் இந்​தி​யா, சீனா உள்​ளிட்ட நாடு​கள் மீது 50 முதல் 100 சதவீதம் வரை வரி வி​திப்​ப​தற்​கான வாய்ப்​பு​கள்​ குறித்​து பரிசீலிக்​கு​மாறு கேட்​டுக்​ கொண்​ட​தாக தகவல்​ வெளி​யாகி உள்​ளது.

நன்றி

Leave a Reply