வாஷிங்டன்: ‘‘இந்தியா பள்ளிக் குழந்தை அல்ல. பெரிய நாடு. அதற்கு அதிபர் ட்ரம்ப் விதித்த 50 சதவீத வரி விவேகமான கொள்கை கிடையாது’’ என அமெரிக்க பத்திரிகையாளர் ரிக் சான்சேஸ் விமர்சனம் செய்துள்ளார்.
உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்யாவிடம் இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கியதால், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 50 சதவீதமாக உயர்த்தினார்.
அதிபர் ட்ரம்ப் அறிவித்த வரி விதிப்பு சட்டவிரோதமானது எனவும், இதை நீக்க வேண்டும் என அமெரிக்க மேல் முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க பத்திரிகையாளர் ரிக் சான்சேஸ் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: இந்தியாவை, பள்ளிக் குழந்தை போல் அமெரிக்கா நடத்தக் கூடாது. இந்தியா பெரிய நாடு.
அதிபர் ட்ரம்ப் எடுக்கும் முடிவுகள் பெரும்பாலும் அக்கறையுடன் கூடிய மற்றும் அறிவியல் பூர்வமான சிந்தனையாக இருப்பதில்லை. இந்தியா எடுக்கும் முடிவுகளுக்கு மேற்பார்வை தேவை என்பது போல் அமெரிக்காவின் அணுகுமுறை உள்ளது.
இதை கண்டுகொள்ளாமல் இந்தியா தனது நிலைப்பாட்டை அப்படியே பின்பற்றுவது பாராட்டுக்குரியது. அமெரிக்காவின் வரிக் கொள்கை பார்ப்பவர்களுக்கு மிகச் சிறந்தவையாக இருப்பது போல் தெரியும்.
ஆனால், இது அவமதிப்பான மற்றும் விவேகமற்ற கொள்கை. உக்ரைன் மீது ரஷ்யா ஏன் போர் தொடுத்தது என்ற நிலைப்பாட்டை அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் புரிந்து கொள்ளவில்லை. நீண்ட வரலாறு, வளங்கள் மற்றும் திறன்கள் உள்ள இந்தியாவை, பள்ளிக் குழந்தை போல் நடத்துவது அவமதிப்பானது. இந்தியா வளர்ந்த நாடு.
ரஷ்யாவிடம் இருந்து சீனா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தாலும், அதன் மீது நடவடிக்கை எடுப்பதில் அமெரிக்கா தனது வரம்புகளை உணர்கிறது. இந்தியா மீது 50 சதவீத வரி விதிக்கும் விஷயத்தில் அதிபர் ட்ரம்ப் எடுத்த முடிவு அவரது தனிப்பட்ட கோபம் காரணமாக எடுக்கப்பட்டது.
சர்வதேச விஷயங்களில் பின்னணி சம்பவங்களை பற்றி அமெரிக்க தலைவர்கள் பலருக்கு சரியான புரிதல் இல்லை. ரஷ்யா – உக்ரைன் இடையேயான மோதலை பிரதமர் மோடியால் நடைபெறும் போர் என அதிபர் ட்ரம்பின் ஆலோசகர் பீட்டர் நவேரோ கூறுகிறார். இது முற்றிலும் நகைப்புக்குரியதாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.