இந்திய அணியின் கேப்டனாவேன்… ஜெய்ஸ்வால் ஓபன் டாக்!

இந்திய அணியின் கேப்டனாக வேண்டும் என்பதே எனது கனவு என்று இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் ஃபிட்னஸில் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.

இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2026 டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன்சியையும் சுப்மன் கில் ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனால் சுப்மன் கில் இந்திய கிரிக்கெட் அணியின் முகமாக உருவாகி வருகிறார். விரைவில் அடுத்த விராட் கோலியாக சுப்மன் கில் வர வேண்டும் என்றும் பிசிசிஐ விரும்புகிறது.

ஆனால் சுப்மன் கில்லுக்கு இணையாக இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் மிகப்பெரிய வீரராக உருவாகி வருகிறார். இந்தியா மட்டுமல்லாமல் வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடி இருக்கிறார்.

ஐபிஎல் தொடரிலும் ஜெய்ஸ்வால் ஒவ்வொரு சீசனிலும் அசத்தி வருவதால், ஜெய்ஸ்வாலுக்கு கேப்டன்சி பொறுப்பு கிடைக்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளது. 

அதேபோல் கேப்டன்சியில் ஜெய்ஸ்வாலும் ஆர்வமாக இருந்து வருகிறார். அண்மையில் கூட ரஞ்சி டிராபியில் மும்பை அணிக்காக ஆடி வந்த ஜெய்ஸ்வால், கேப்டன்சி பதவிக்காக கோவா அணிக்கு இடம்பெயர முடிவு எடுத்தார்.

ஆனால் மும்பை அணி ஜெய்ஸ்வாலை சமாதானம் செய்து முடிவில் இருந்து பின்வாங்க வைத்தது. அதேபோல் ராஜஸ்தான் அணியிலும் கேப்டன்சி கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கூடி வந்தது. 

ஆனால் அந்த அணியின் உரிமையாளர்களின் தலையீடு காரணமாக, ரியான் பராக் அந்த வாய்ப்பை பெற்றார். இந்த நிலையில் ஜெய்ஸ்வால் தனது கேப்டனாக வேண்டும் என்ற ஆசை இருப்பதாக வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

இதுதொடர்பாக ஜெய்ஸ்வால் பேசுகையில், தற்போதைய சூழலில் எனது ஃபிட்னஸில் கவனம் செலுத்தி வருகிறேன். என் உடல் நிலையில் அதிக கவனம் செலுத்துவதால், பல்வேறு விஷயங்களையும் கற்று வருகிறேன். பேட்டிங் மட்டுமல்லாமல் ஃபிட்னஸ் உடன் இருந்தால், இன்னும் சிறப்பாக விளையாட முடியும். அதேபோல் ஒவ்வொரு நாளும் தலைவனுக்கான பண்புகளையும் உருவாக்கி கொள்கிறேன்.

ஒருநாள், நிச்சயமாக கேப்டனாக களமிறங்க வேண்டும் என்ற ஆசை உள்ளது என்று தெரிவித்தார். பிசிசிஐ நிர்வாகம் சுப்மன் கில்லை வேகமாக உருவாக்கி வரும் சூழலில், ஜெய்ஸ்வால் கேப்டன்சி லட்சியத்தோடு தயாராகி வருகிறார். 

இதனால் விரைவில் டெஸ்ட் அணியில் துணைக் கேப்டன்சி பொறுப்பு ஜெய்ஸ்வாலுக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

நன்றி

Leave a Reply