ஆர்ஜன்டினா அணியின் தலைவரான பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி 14 ஆண்டுகளுக்கு பின்னர் 3 நாட்கள் பயணமாக இன்று காலை இந்தியாவுக்கு சென்றுள்ள நிலையில் அவரை காண்பதற்காக ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த கால்பந்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கோஷம் எழுப்பி மகிழ்ச்சி வெளிப்படுத்தினர்.
இதனையடுத்து கொல்கத்தாவில் லேக் டவுன் பகுதியில் ஸ்ரீபூமி விளையாட்டு கிளப் சார்பில் 70 அடி உயரத்தில் நிறுவப்பட்ட தனது உருவச்சிலையை மெஸ்ஸி காணொலி மூலம் திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து சால்ட்லேக் ஸ்டேடியத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில்
அந்த மைதானத்தில் வருகை தந்த மெஸ்ஸிக்கு ரசிகர்கள் உற்சாகத்துடன் கோஷம் எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் எழுப்பினர்.
இதன்போது மைதானதிற்கு வந்த மெஸ்ஸி வெகு சில நிமிடங்களே களத்தில் இருந்ததாகவும், அப்போதும் அவரை சரியாக பார்க்கக் கூட முடியாத வகையில் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் அவரை முழுவதுமாக சூழ்ந்துகொண்டதாகவும் ரசிகர்கள் கூறினர்.
இந்நிலையில் மெஸ்ஸியை காண இந்திய மதிப்பில் 5,000 ரூபாய் முதல் .12,000 ரூபாய் வரை நுழைவு சீட்டு பெற்று ரசிகர்கள் வந்துள்ள நிலையில் மைதானத்திற்கு வருகைதந்த மெஸ்ஸி உடனே அங்கிருந்து வெளியேறியமையினால் ரசிகர்கள் ஆத்திரமடைந்தனர்.
இதனால் மைதானத்தில் தண்ணீர் போத்தல்களை எறிந்தும் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையை அடித்தும் ரசிகர்கள் வன்முறையில் ஈடுப்பட்டனர். இதனால் ரசிகர்கள் மீது பொலிஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
இதனையடுத்து இந்த சம்பவத்திற்கு அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி மன்னிப்பு கேட்டுள்ளார்.
இந்நிலையில் மெஸ்ஸி கலந்துகொண்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளரை பொலிஸார் கைது செய்த நிலையில் மேலும் டிக்கெட்டிற்கான பணத்தை திருப்பித் தருவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உறுதியளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
