இந்தியாவின் வளர்ச்சிக்கு அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கை பெரிய தடையாக அமையாது என இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்திரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உலகப் பொருளாதாரத்தில் பல சவால்கள் இருந்தும், இந்தியா கடந்த ஆண்டு 8 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது எனவும் இந்தியா பெரும்பாலும் உள்நாட்டு பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டது எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
எனவே, வெளிநாட்டு (அமெரிக்கா) வரிவிதிப்பு நடவடிக்கைகள் தமது நாட்டின்மீது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும் அமெரிக்காவின் வரி விதிப்பால் சர்வதேச வர்த்தகம் சீர்குலைந்ததுடன், பல்வேறு நாடுகளின் பொருளாதார வளர்ச்சியையும் பாதித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனா மற்றும் ரஷ்யா – உக்ரைன் போரினால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து விரைவாக மீண்டு வந்துள்ளதாகவும் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேபோல, அமெரிக்க டொலருக்கு நிகராக, இந்திய ரூபாயின் மதிப்பு, ஏனைய நாடுகளின் நாணயத்தாள் போல் அதிகம் மதிப்பிழக்கவில்லை என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
